சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட கொல்லம் விரைவு ரயிலானது, உளுந்தூர்பேட்டைக்கும் விருத்தாசலத்துக்கும் இடையில் சென்றுகொண்டிருந்தபோது ஏழு மாத கர்ப்பிணிப்பெண் ஒருவர் குறித்த ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த ரயில்வே பொலிஸார் தவறி விழுந்த கர்ப்பிணிப் பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டு தேடியபோது உளுந்தூர்பேட்டையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் சடலமாக கர்ப்பிணிப் பெண்ணை மீட்டுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், ரயில் பயணத்தின்போது குறித்த பெண்ணுக்கு வாந்தி வந்துள்ளது. அப்போது உடனடியாக கை கழுவும் இடத்துக்கு வந்து வாந்தி எடுத்தபடி நின்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி ரயிலிலிருந்து கீழே விழுந்துள்ளார்.
இதன்படி, குறித்த ரயில் பெட்டியில் அபாய சங்கிலி செயல்படாதது குறித்தும் பலியான பெண் எதற்காக ரயில் பெட்டியின் அருகில் சென்றார் என்பது குறித்தும் விசாரணை நடத்தவும் தெற்கு ரயில்வேயினால் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.