கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த ரயிலுடன் முந்தல் – புளிச்சாக்குளம் பாதுகாப்பற்ற ரயில் கடவையின் ஊடாக செல்ல முற்பட்ட இளைஞன் ஒருவர் நேற்று (28) விபத்துக்குள்ளானதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பத்துலுஓயா பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனை முந்தல் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதேவேளை, புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலை புளிச்சாக்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நிறுத்தி, பாதுகாப்பற்ற கடவைக்கு தீர்வு பெற்று தருமாறு முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு தற்காலிக தீர்வாக இருவரை நியமித்துக் கொள்ளுமாறும் அதற்கான கொடுப்பனவை ரயில் திணைக்களத்திடமிருந்து பெற்று தருவதாக தெரிவித்தையடுத்து மாலை 6.00 மணிளவில் ரயில் செல்லுவதற்கு மக்கள் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.