நாடு வங்குரரோத்து நிலையில் இருந்து மிக குறுகிய காலத்தில் மீளக்கூடிய நிலை இருக்கிறது.
அதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து மக்களின் வாழ்வாதார போராட்டத்துக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
பொருளாதார ரீதியில் நாங்கள் வீழ்ச்சியடைந்தோம். அதனால் எமது நாடு வங்குராேத்து நிலைக்கு தள்ளப்பட்டது.
வங்குராேத்து நிலை நிறைவுக்கு வந்தால் எமது பொருளாதார அபிவிருத்திக்கு தேவையான உதவிகளை எங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.
நாங்கள் தற்போது ஸ்திர நிலையை அடைந்திருக்கிறோம். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்துவந்த எரிவாயு,சமையல் எரிவாயுக்கான வரிசை இல்லை.
மருந்து தட்டுப்பாடு இல்லை. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தேவையான அளவு நாட்டில் தற்போது இருக்கிறது. என்றாலும் இன்னும் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை.
குறிப்பாக மக்களின் வாழ்வாதார பிரச்சினையே தற்போது பிரதானமாக இருந்து வருகிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண பொருளாதாரத்தை விரைவாக அபிவிருத்தி செய்ய வேண்டும்.
அதற்கு நாங்கள் கடன் பெற்றவர்களுடன் கலந்துரையாடி எமது கடன் மறுசீரமைப்புக்கு அவர்களின் இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த நடவடிக்கையை தற்போது நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம்.
மிக குறுகிய காலத்தில் இதனை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவர நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுத்துக்கொண்டே மக்களின் வாழ்க்கைச்செலவு போராட்டத்தை தீர்த்துக்கொண்டு, மக்களுக்கு சேவைகளை வழங்குங்குவதை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம் என சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.