November 17, 2025
வடக்கில் சீன நாட்டின் கடலட்டை பண்ணைகள் எங்கே உள்ளது?
புதிய செய்திகள்

வடக்கில் சீன நாட்டின் கடலட்டை பண்ணைகள் எங்கே உள்ளது?

Jun 11, 2024

வடபகுதியில் சீன நாட்டின் கடலட்டை பண்ணைகள் எங்கு இருக்கின்றது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் காண்பிக்க முடியுமா என சவால் விடுத்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் (11.06.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்

சுவிர்சலாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற தமிழர் பொருளாதார மாநாடொன்றில் சீன நாட்டின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்ற கடலட்டைப் பண்ணைகள் புதிய தாக்கங்களை உருவாக்கியுள்ளன.

இது கடற்றொழிலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

குறிப்பாக வடக்கு மீனவர்கள் பெரும் இடர்களை எதிர்நோக்கியுள்ளனர் என கூறியுள்ளார்.

ஆனால் வடக்கிலும் மத்தியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரம் இருந்த காலப் பகுதியிலேயே யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சீன நாட்டின் நிறுவனத்திற்கு கடலட்டை குஞ்சுகள் உற்பத்தி செய்வதற்கான கடலட்டைப் பண்ணையை இவர்கள் வழங்கியிருந்தார்கள்.

பின்னர் கடற்றொழில் அமைச்சராக எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பொறுப்பேற்றதன் பின்னர் குறித்த சீன கடலட்டைப் பண்ணை மூடப்பட்டது.

அவ்வாறிருக்கின்றபோது சிவஞானம் சிறீதரன் எவ்வித அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை புலம்பெயர் தேசங்களில் இவ்வாறான நிகழ்ச்சிகளில் பொய்யுரைத்து வருகின்றார்.

வடக்கு கிழக்கில் குறிப்பாக வன்னிப் பிரதேசத்திலும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பொருளாதார மேம்பாட்டுக்காக அவர் வகுக்கின்ற திட்டங்கள் மக்களிடத்தில் செல்வாக்கு பெற்றுவருவதை பொறுத்துக்கொள்ள முடியாத சிறீதரன் பொன்றோர் தமது அரசியல் இருப்புக்களும் கேள்விக் குறியாக இருக்கின்ற சூழலில் இவ்வாறான அவதூறுகளையும் பொய்ப் பிரசாரங்களையும் நம்பியே தமது அரசியலை ஓட்டவேண்டியிருக்கின்றது.

ஆயினும் சிவஞானம் சிறீதரன் வடக்கில் எங்கே எந்த இடத்தில் சீன நிறுவனத்திற்கு கடலட்டைப் பண்ணைகள் உள்ளது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

இதை விடுத்து கடற்றொழில் மக்களின் பொருளாதார பாதிப்புக் குறித்து கவலைப்படாது கவர்ச்சியான அபாண்ட பொய்களை உரைத்து எப்படியாவது மீண்டும் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை அவர் கைவிடவேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இச் செய்தியை எமது பிராந்திய செய்தியாளர் வழங்கியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *