இலங்கை போக்குவரத்து சபையின் (இ.போ.சபை) வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறல்களை கண்டித்து, எதிர்வரும் செவ்வாயன்று (ஜூலை 2) வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக, வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, தனியார் மற்றும் அரசு பேருந்து சாரதிகள் இடையே குழப்ப நிலை உருவாகி, சில நிமிடங்களுக்கு வாகன நெரிசலும் ஏற்பட்டது. பின்னர், பொலிசார் இடையீடு செய்ததுடன், நிலைமை சுமூகமானது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சங்கத் தலைவர் கூறுகையில், கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, சாலை முகாமையாளரின் உத்தரவின் பேரில், வவுனியா நோக்கி சட்டவிரோத சேவையை மேற்கொள்ள முயன்றது எனவும், அதனை கண்டித்த போதும், இ.போ.சபை அச்செயலைத் தொடர முயன்றதாகவும் தெரிவித்தார்.
மேலும் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறைகள் போக்குவரத்து அதிகார சபை, சம்பந்தப்பட்ட அமைச்சு, மற்றும் வடக்கு ஆளுநரிடம் முறையிட்டிருந்தும், யாதொரு தீர்வும் இதுவரை இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
தனியார் சேவைகளை முடக்கும் வகையிலும், பயணிகள் பாதுகாப்பு மற்றும் பரஸ்பர முரண்பாடுகள் உருவாகும் சூழ்நிலையை உருவாக்கும் வகையிலும் இ.போ.சபை செயற்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், சட்ட ஒழுங்கை உறுதி செய்வதற்காக, முழுமையான சேவை முடக்கல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.



