வவுனியா, சமயபுரம் பகுதியில் மனைவியையும், அவரது தாயாரையும் கத்தியால் குத்திக் காயப்படுத்திய குடும்பஸ்தர், பின்னர் அந்த வீட்டின் கிணற்றில் குதித்து உயிரிழந்துள்ள சோக சம்பவம் நேற்று (ஜூலை 2) மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றது.
உயிரிழந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 45) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வசந்தி (வயது 30) மற்றும் அவரது தாயார் இந்திரா (வயது 69) ஆகியோர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக, கிருஷ்ணகுமார் சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வருகை தந்து, மனைவியையும், மாமியாரையும் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் வீட்டில் தீ வைக்கப்பட்டதுடன், அவர் கிணற்றில் குதித்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் தற்கொலை செய்தாரா அல்லது இது வேறு வகைத் தாக்குதல் சம்பவமா என்பது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை உயிரிழந்த குடும்பஸ்தரும்,காயமடைந்த பெண்ணும் வெவ்வேறு பகுதிகளை சேந்தவர்கள் என கிராமமக்கள் தெரிவித்ததுடன் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக கடந்த ஒரு வருடகாலமாக சமயபுரம் பகுதியில் வசித்துவருவதாக தெரிவிக்கின்றனர்.அத்துடன் அவர்கள் இருவரும் ஏற்கனவே வெவ்வேறு திருமணங்களை முடித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.



