நாட்டில் 15 லட்சம் அரச உத்தியோகத்தர்களைக் கொண்ட தொழிற் சங்கங்கள் தொடர்ச்சியான பாரிய தொழிற்சங்கப் போராட்டங்களை சம்பள உயர்வு கோரி அரசாங்கத்திற்கு எதிராக மேற் கொள்கின்றனர்.
இதனை உரிய முறையில் எதிர் கொள்ள அரசு தயாராக இல்லை காரணம் நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் துளியளவு கூட மீள எழவில்லை மாறாக மக்கள் மீது திணிக்கப்பட்ட வரி விதிப்பின் வருமானமும் கடன் செலுத்துவதை அரசாங்கம் நிறுத்தியதன் காரணமாகவே வரிசையுகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பொருளாதாரத்தை மீட்டு விட்டோம் என பொய் கூறும் அரசாங்கத்திற்கு தொழிற்சங்கப் போராட்டங்கள் பேரிடியாக மாறியுள்ளது தேர்தல் இலக்கிற்காக போலியான பொருளாதார மாற்றத்தை காட்ட அரசாங்கம் கடும் பிரையத்தனம் செய்கிறது.
நாட்டில் இரண்டு கோடி இருபது லட்சம் மக்கள் வாழ்கின்ற போது 15 லட்சம் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள உயர்வை கூட்டினால் இரண்டு கோடி 5 லட்சம் மக்கள் மேலும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் எனவே வாழ்க்கைச் செலவு அனைவரும் எதிர் நோக்கும் மிகப் பெரிய பிரச்சினையாகும்.
தொழிற்சங்க போராட்டக்காரரின் கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும் அவர்களுக்கான சம்பள உயர்வை ஈடு செய்ய அரசாங்கம் பொருட்கள் சேவைகளின் வரிகளை அதிகரிப்பதை தவிர வேறு வழி இல்லை எனவே அரசாங்கம் தொழிற் சங்கப் போராட்டங்களை ஓரளவு கட்டுப்படுத்தவும் ஏனைய மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கவும் உடனடித் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் போராட்டங்கள் வலுப் பெறுவதை தடுக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.