Tamil News Channel

வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்..!

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ சார்பில் இன்று மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.

பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த 1994ம் ஆண்டு இந்திய அணியின் முதல் கேப்டன் சி.கே.நாயுடுவை கவுரவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. இந்த விருதினைப் பெறும் 31-வது நபர் சச்சின் டெண்டுல்கர் ஆவார்.

51 வயதான டெண்டுல்கர், இந்திய அணிக்காக 664 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் தன்வசம் வைத்துள்ளார்.

மேலும் 200 டெஸ்ட் மற்றும் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் வடிவில் அதிக எண்ணிக்கையிலான போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார்.

டெஸ்ட் போட்டிகளில் அவர் 15,921 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களும் குவித்துள்ளார். இருப்பினும், அவர் இந்திய அணிக்காக ஒரே ஒரு டி 20 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார்.

கடந்த 1989-ம் ஆண்டு தனது 16 வயதில் இந்திய அணிக்காக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் அங்கம் வகித்திருந்தார்.

இந்நிலையில் 24 வருடங்கள் இந்திய கிரிக்கெட்டுக்காக சச்சின் செய்த சாதனைகளை பாராட்டி அவருக்கு மும்பையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருதை இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்கி கவுரவிக்க உள்ளது.

சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான மதிப்புமிக்க பாலி உம்ரிகர் விருது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவும், சிறந்த வீராங்கனை விருது ஸ்மிருதி மந்தனாவுக்கும் வழங்கப்பட உள்ளது.

சிறந்த மாநில கிரிக்கெட் விருதை மும்பை கிரிக்கெட் சங்கம் பெறுகிறது. நிகழ்ச்சியில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்றிருந்த ரவிச்சந்திரன் அஸ்வினும் கவுரவிக்கப்பட உள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts