July 8, 2025
விஞ்ஞாபனத்தில் இருந்து பரிந்துரைகளை நீக்கவேண்டும்: ரணிலின் பிரச்சாரம்…!
இலங்கை அரசியல் புதிய செய்திகள்

விஞ்ஞாபனத்தில் இருந்து பரிந்துரைகளை நீக்கவேண்டும்: ரணிலின் பிரச்சாரம்…!

Sep 4, 2024

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பரிந்துரைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இருந்து நீக்கிக் கொள்ளுமாறும் தான் அதனை நிறைவேற்றி முடித்து விட்டதாகவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தி  மற்றும் ஜே.வி.பி கட்சிகளுக்குத் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

பெல்மடுல்ல வாராந்த சந்தை வளாகத்தில் நேற்று(03.09) நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கியதாக மேடையில் அறிவிக்க முடியும் என்பதை இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவினால் வெற்றிபெற முடியாது எனவும் அவருக்கு வழங்கும் வாக்கு அநுரகுமாரவுக்கு வழங்கும் வாக்குகளுக்கு சமனாகும் என்பதால் இதுகுறித்து ஐக்கிய தேசியக் கட்சியினர் அவதானமாக செயல்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது,
”அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான அறிக்கையை  உதய செனவித்ன  என்னிடம் சமர்ப்பித்திருந்தார். நாம் அளித்த மற்றொரு வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். நாம் வாக்குறுதி அளிப்பதற்காக மேடைகளில் ஏறுவதில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு தான் மக்கள் முன்னிலையில் சொல்கிறேன்.

2023 இல் வாழ்க்கைச் செலவு உயர்ந்து இருந்தது. தற்பொழுது ரூபா பலப்படுத்தப்பட்டது. வருமானம் அதிகரிக்கப்பட்டது. 2024 பல நிவாரணங்கள் வழங்கியுள்ளளோம். அரச ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவு என்பன அதிகரிக்கப்பட்டுள்ளன. வாழ்க்கைச் செலவு குறைந்துள்ளது. இதனுடன் எமது செயற்பாடுகளை நிறுத்தப் போவதில்லை. ரூபா மேலும் பலமடையும்.

இரண்டொரு வருடங்கள் செயற்படுவதால் மாத்திரம் நாட்டில் முழுமையான ஸ்தீர நிலை ஏற்படாது. எமது திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். மொத்தத் தேசிய உற்பத்தியை மேலும் அதிகரிக்க வேண்டும். பணம் அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளது. இருக்கும் வருமானத்தை கொண்டு செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அரச துறை மட்டுமன்றி தனியார் துறை சம்பளத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐமச மற்றும் தேமச என்பன வருமானத்தை குறைத்து செலவை குறைப்பதாக குறிப்பிட்டுள்ளது.4 வருடங்கள் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகள் அடுத்த வருடம் வழங்கப்படும்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். பிங்கிரிய திருகோணமலை ஹம்பாந்தோட்டையில்  முதலீட்டு வலயங்களை ஆரம்பிக்க இருக்கிறோம். சுரங்கத் தொழிலாளர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சூரிய சக்தி திட்டங்களை ஆரம்பிக்கவும் டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

எதிர்வரும் 10 வருடங்களில் எமக்குத் தேவையான அந்நியச் செலாவணியை உருவாக்காவிடின் நெருக்கடி நிலை ஏற்படும். குறைந்த வருமானம் பெறுவோருக்கு சிறந்த கல்வி, சுகாதாரம் வசதிகளை வழங்கவும் வருவாயை அதிகரிக்கவும் புரட்சிகரமான திட்டங்கள் முன்னெடுக்க இருக்கிறோம்.

பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். முதன் முறையாக பெண்களை வலுப்படுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சகல பொலிஸ் நிலையங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக முறையிட பிரிவு ஆரம்பிக்கப்படும்.

ஏனைய கட்சிகள் மோசடி பற்றி பேசினாலும் உலகில் தலைசிறந்த மோசடி தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் சில சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். திருடர்களைப் பிடிப்பதற்கான நிறுவனங்களை பலப்படுத்த வேண்டும்.  அரசியல்வாதிகளுக்கு திருடனைப் பிடிக்க முடியாது. அது பொலிஸாரினதும் நீதிமன்றங்களினதும் பணியாகும்.

ஊருகஸ்மங் சந்தியில் மேஜர் மல்லிகாவை வைத்த 1971 இல்  ஜே.வி.பி நீதிமன்றம்  அமைத்தது. அது போன்று நாம் செய்ய மாட்டோம். மக்கள் சபைகளை உருவாக்கவும் தேர்தல் முறையை மாற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாற்றம் வேண்டும் என்று கோரி மக்கள் வீதியில் இறங்கினார்கள். அந்த மாற்றத்தை நாம் மேற்கொண்டு வருகிறோம்.

செப்டம்பர் 21 ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களியுங்கள். தவறினால் கேஸும் இல்லை. எதிர்பார்க்கும் மாற்றமும் நடக்காது” என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *