Tamil News Channel

விளையாட்டு வீரர்கள் நெருக்கடிக்குள்ளானால் நாடு பின்னடைவை எதிர்கொள்ளும்; நாமல் ராஜபக்ச!

Screenshot 2025-03-18 165411

அரசாங்கமும் கிரிக்கெட் சபையும் முரண்பட்டுக்கொண்டால் வீரர்களே பாதிக்கப்படுவார்கள், விளையாட்டு வீரர்கள் நெருக்கடிக்குள்ளானால் நாடு பின்னடைவை எதிர்கொள்ள நேரும் என நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இன்று (18) நாடாளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச,

“கிரிக்கெட் சபையும், அரசாங்கமும் முரண்பட்டுக்கொண்டால் பாதிக்கப்படுபவர்கள் வீரர்களே. அரசியல்வாதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

கிரிக்கெட் உட்பட விளையாட்டு சங்கங்கள் அரசியல் தலையீடுகளிலிருந்து விடுபட்டு சுயாதீனமாக செயற்பட்டால் தகுதியானவர்கள்
பதவிகளுக்கு தெரிவாவார்கள்.

கொவிட் தொற்று மற்றும் பொருளாதார பாதிப்பினால் வீழ்ச்சியடைந்துள்ள கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கு விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக வரி கொள்கை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்களின் தேவைகளுக்கு அமைவாக வரிக் கொள்கை திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.

தேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கு கடந்த அரசாங்கங்கள் அனைத்தும் தொழில் முயற்சியாளர்களுக்கு பல்வேறு வழியில் நிவாரணம் மற்றும் சலுகைகளை வழங்கியுள்ளன.

ஆகவே, தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் விசேட அவதானம் செலுத்த வேண்டும்.

கிரிக்கெட் சபையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு காண வேண்டும். அதை விடுத்து ஒருவருக்கொருவர் விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டிருந்தால் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியாது.” என தெரிவித்தார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *