Tamil News Channel

வீடு கட்டுவதற்கு அத்திவாரம் முக்கியம் அதே மாதிரி கல்வி கற்பதற்கு தன்னம்பிக்கை முக்கியம்– சாதனை படைத்துள்ள விசேட தேவையுடைய மாணவன் பாலச் சந்திரன் பிரஷேபன்

ஒரு வீடு கட்டுவதற்கு மிகவும் அவசியமானது  அத்திவாரம் அதே போன்று கல்வி கற்பதற்கு தன்னம்பிக்கை தான் அத்திவாரம் அதனை நான்  5 வயதில் இரு விழிகளை இழந்த பின்னர் ஏற்படுத்தியதால் இன்று இந்த நிலைக்கு வந்துள்ளேன்.

உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் சாதனை படைத்துள்ள விசேட தேவையுடைய மாணவன் பாலச்சந்திரன் பிரஷேபனே இவ்வாறு தெரிவித்தார்.

இரு விழிகளையும் இழந்த மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மாணவனான பாலச்சந்திரன் பிரஷேபன் என்னும் மாணவன் உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் தோற்றி இரண்டு A சித்திகளையும் ஒரு B சித்தியையும் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை  மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தில் வலய கல்வி பணிப்பாளரும் மாகாண கல்விப்பணிப்பாளருமான திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் குறித்த மாணவன் கல்விப்பணிமனையினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

இதன் போது மாணவன் கருத்து தெரிவிக்கையில் சில ஆசிரியர்கள், மாணவர்கள் நினைக்கின்றார்கள் விசேட தேவையுடையவர்களுக்கு விசேட கல்வி இருக்கின்றது, அதன்மூலம் அவர்கள் இலகுவாக சித்தியடைகின்றார்கள் என்று. அவ்வாறு இல்லை நாங்களும் ஏனைய மாணவர்கள் கற்கும் அதே பாடத்திட்டத்தினையே கற்கின்றோம்.

எங்களை இயலாதவர்கள் என்றே நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான நிலை மாறவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

குறித்த மாணவன் இரு விழிகளையும் இழந்த நிலையில் மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையிலும்,மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையிலும் தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து இந்த சாதனையினை படைத்துள்ளார்.

இதேநேரம் குறித்த மாணவனுக்கு பல்கலைக்கழகத்தின் கல்வியை பூர்த்திசெய்வதற்கான உதவிகளை வழங்குமாறு குறித்த மாணவனின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts