November 13, 2025
வெண்டைக்காய் ஊற வைத்த நீரும், பாகற்காய் நீரும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துமா..?
மருத்துவம்

வெண்டைக்காய் ஊற வைத்த நீரும், பாகற்காய் நீரும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துமா..?

Sep 5, 2024

வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் என்பதால், கழிவுகளை முழுமையாக வெளியேற்றும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ளும். மற்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது அவற்றின் சத்துகள் முழுமையாக உட்கிரகிக்கப்படவும் வெண்டைக்காய் உதவும். அதற்காக வெறும் வெண்டைக்காய் மட்டுமே சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும் என நினைத்து அதை மட்டுமே பின்பற்றுவது நிச்சயம் தவறானது. நீங்கள் கேட்டுள்ளது போல வெண்டைக்காயை ஊறவைத்த நீரை மட்டும் குடிப்பது ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் என்பதற்கு ஆய்வுபூர்வ நிரூபணங்கள் இல்லை. இப்படி வெறும் நீரைக் குடிப்பதற்குப் பதில் வெண்டைக்காயை பொரியலாகவோ, கூட்டாகவோ சமைத்துச் சாப்பிடுவதுதான் அதிக பலன்களைத் தரும்.

வெண்டைக்காயை ஊறவைத்த நீரைக் குடிப்பதைவிடவும், வெந்தயம் ஊறவைத்த நீரைக் குடிப்பது ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். அதைப் பல ஆய்வுக் கட்டுரைகளும் குறிப்பிட்டுள்ளன.

பாகற்காயை ஊறவைத்த தண்ணீரில் பாதங்களை வைத்திருக்கும் பாதக்குளியல் பற்றி சித்த மருத்துவ நூல்களில் எந்தத் தகவலும் இல்லை. ஆனால், அதை ஒரு சிகிச்சையாக பல இடங்களிலும் செய்வதைப் பார்க்கிறோம். அதில் எந்த அளவு பலன் கிடைக்கும் என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப் பட்டிருக்கிறதா என்றும் தெரியவில்லை. இது போன்ற புற சிகிச்சைகளால் நன்மை கிடைக்கிறதோ இல்லையோ,  பாதகங்கள் ஏற்படாது என்பதால் இதைப் பின்பற்றினாலும் பிரச்சினையில்லை.

உங்களைப் போல பலரும் சமூக ஊடகங்களில் வலம்வரும் இது போன்ற வீடியோக்களை, தகவல்களை நம்பி, அவற்றை மட்டுமே பின்பற்றுகிறார்கள். ரத்தச் சர்க்கரை அளவைக்கூட டெஸ்ட் செய்து பார்க்காமல் அலட்சியமாக இருக்கிறார்கள். அது தவறு. அவ்வப்போது ரத்தப் பரிசோதனை செய்து பார்த்து சர்க்கரை அளவைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப முறையான சிகிச்சையைச் செய்துகொள்ள வேண்டியது மிக முக்கியம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *