Tamil News Channel

வெயிலால் வரும் வேர்க்குருவை போக்க 5 எளிதான வீட்டு வைத்தியங்கள்..!

நம் உடலில் எங்கு அதிகமாக ஈரப்பதம் இருக்கிறதோ, அங்கு அதிகமான வியர்வை ஏற்படுகிறது. அந்தப் பகுதிகளில் தான் இவை அதிகம் வருகின்றன.

கோடை காலம் வந்துவிட்டால் போதும், பலரும் சருமப் பிரச்சனையால் வேதனைப் படுவார்கள். இந்தப் பருவத்தில் பெரும்பாலானோருக்கு வேர்க்குரு அல்லது வேனிற் கொப்பளப் பிரச்சனை ஏற்படும். வேர்க்குரு வந்துவிட்டால் எரிச்சலும் அரிப்பும் தாங்க முடியாத அளவிற்கு இருக்கும். கழுத்து, பின்புறம், இடுப்பு, மார்பு, முகம் என நம் உடலின் பல பகுதிகளில் சிவப்பு நிறத்தில் சிறு சிறு கொப்பளமாக வந்துவிடும்.

அதிகப்படியான வியர்வை மற்றும் மோசமான சுகாதார பிரச்சனைக் காரணமாக வேனிற் கொப்பளம்/வேர்க்குரு வருகிறது. நம் உடலில் எங்கு அதிகமாக ஈரப்பதம் இருக்கிறதோ, அங்கு அதிகமான வியர்வை ஏற்படுகிறது. அந்தப் பகுதிகளில் தான் இவை அதிகம் வருகின்றன. எனினும் வேனிற் கொப்பளங்கள்/வேர்க்குரு அந்தளவிற்கு தீவிரத்தன்மை வாய்ந்தது அல்ல. சில நாட்களிலேயே இவை சரியாகிவிடும். இது வராமல் தடுக்க ஓரு சிலர் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் பவுடர்களை பயன்படுத்துவார்கள். வேர்க்குருவை முழுமையாக போக்க, சில வீட்டு வைத்திய முறைகளை நாங்கள் கூறுகிறோம்.

வேர்க்குருவை போக்கும் பிரபலமான வீட்டு வைத்தியம் என்றால், அது முல்தானி மிட்டி. இதை எப்படி பயன்படுத்துவது? ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மிட்டியுடன் ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரை சேர்த்து கலக்குங்கள். பேஸ்ட் பக்குவத்தில் வந்ததும் அதை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவுங்கள். இயற்கையாகவே முல்தானி மிட்டி குளிர்சியான தன்மை கொண்டதால் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவற்றை குறைக்கும். மேலும் முல்தானி மிட்டியில் இருக்கும் நுண்ணுயிர்க் கொல்லிகள், பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றினால் நமக்கு ஏற்படும் சருமப் பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

அடுத்ததாக, கற்றாழை. இது சிறந்த மருத்துவ குணம் கொண்டது. கற்றாழை செடியின் தோலை சீவினால், உள்ளே ஜெல் போன்று இருக்கும். இதை வேனிற் கொப்பளம்/வேர்க்குரு பாதித்த பகுதிகளில் தடவி, 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள். கற்றாழை மென்மையும் வழுவழுப்பும் கொண்டது. இதை இரவு நேரத்தில் படுக்கும் போது பாதித்த பகுதிகளில் தேய்த்துவிட்டு, காலையில் குளிர்ந்த நீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். தொடர்ந்து கற்றாழையை பயன்படுத்தி வந்தால், வேர்க்குரு மற்றும் வேனிற் கொப்பளத்தை விரட்டியடிக்கலாம்.

இன்னொரு எளிய சிகிச்சை முறையை கூறட்டுமா?  நம் வீட்டு ஃபிரிட்ஜில் இருக்கும் ஐஸ் கட்டிகள், வேர்க்குரு பிரச்சனைக்கு சிறந்த நிவாரணத்தைக் கொடுக்க கூடியது. 5 அல்லது 6 ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டி, அதை வேர்க்குரு வந்த பகுதிகளில் படுமாறு வையுங்கள். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக எரிச்சல் தன்மை குறைந்து, வேர்க்குருவினால் ஏற்பட்ட அரிப்பும் சிவப்பு தோலும் மறைந்து விடும்.

வேம்பு இலை, இயற்கையாக கிடைக்கும் இன்னொரு சிகிச்சை. உங்கள் கையளவு வேம்பு இலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதை அரை லிட்டர் நீரில் கொதிக்க விடுங்கள். இந்த நீர் குளிர்ந்ததும், பாதிக்கப்பட்ட பகுதிகளை இதை வைத்து சுத்தம் செய்யுங்கள். வேர்க்குருவினால் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பை குணமாக்கும் தன்மை இயற்கையாகவே வேம்பில் இருக்கிறது.

பல சருமப் பிரச்சனைகளுக்கு தயிர் ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நன்றாக தயிரை தடவுங்கள். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் அந்த இடத்தை கழுவுங்கள். தயிரில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், வேர்க்குரு மற்றும் பாக்டீரியா தொற்றை போக்குகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts