நாடு முழுவதும் பெய்துவரும் தொடர் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் அதிகளவான பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தமாக 1126 குடும்பங்களைச் சேர்ந்த 3463 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக முத்து ஐயன்கட்டுக்குளத்தின் 4 வான் கதவுகள் 2 அடி 9 அங்குலத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.
இதனால் முத்து ஐயன்கட்டு, பேராறு, முத்து வினாயகபுரம், வசந்தபுரம், மன்னகண்டல், பண்டாரவன்னி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீரில் மூழ்கியோரை பாதுகாப்பாக மீட்பதில் இராணுவத்தினர் முன்னின்று செயற்படுவதோடு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அதிகாரிகள், கிராம அலுவலர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர்களும் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் இரண்டு தங்கல் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கருவேலகண்டல் அரச தமிழ் கலவன் பாடசாலை மற்றும் புளியங்குளம் பொது நோக்கு மண்டபம் என்பவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான உணவு மற்றும் மருந்துகளை வழங்கும் நடவடிக்கையில் அரச திணைக்கங்கள் ஈடுபட்டுள்ளன.
இதைவிட மதவளசிங்கன் குளத்தின் வான் 2 அடிக்கு பாய்வதால் பூதன்வயல், கணுக்கேணி கிழக்கு மற்றும் முறிப்ப பகுதிகளை சேர்ந்த மக்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் உள்ள மக்களும் வட்டுவாகல் பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளமையால் அதனூடாக பயனிக்கும் மக்களும் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் புளியமுனை விவசாய நிலங்களுக்கு மக்கள் செல்ல முடியாதவாறு வீதிகள் மூழ்கியுள்ளதால் படகு மூலம் மக்கள் சென்று வருகின்றனர்.
தற்போது பெய்துவரும் பருவ மழையானது இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நீடிக்கவுள்ளதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.