Tamil News Channel

வெள்ள நிலமைகள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்..!

மட்டக்களப்பு மாவட்டத்தின்  வெள்ள நிலமைகள் மற்றும் அதன் பாதிப்புக்கள் தொடர்பாகக் கண்காணித்து, ஆராய்வதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னாயக்க மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.

மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்தம் தொடர்பான பாதிப்புக்களை கண்காணித்து ஆராய்வதற்காக விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (29.11.2024) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜெஸ்டினா முரளிதரன், உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா, மற்றும்  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ்சனி முகுந்தன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், உட்பட்ட குழுவினருடன் கலந்துகொண்டனர்.

இதன் போது, மாவட்டத்தின் பட்டிப்பளை, வெல்லாவெளி, வவுணதீவு, போரதீவுப்பற்று,  கிரான், சித்தாண்டி, வாகரை என சகல பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மக்கள், அவர்களுக்கான போக்குவரத்து, தற்காலிக படகு சேவை, சுகாதாரம், நீர் விநியோகம், அத்தியாவசிய தேவைகள் எவ்வாறு கிடைக்கின்றன, மற்றும் அமைக்கப்பட்டுள்ள 56 இடைத்தங்கல் முகாம்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னாயக்க பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அரச அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது காத்தான்குடிப் பிரதேசத்தில் வெள்ள நீரை விடவும் அதிகமாக வாவி நீர் ஊருக்குள் புகுந்ததனால், அதனை அண்டிய பகுதியில் பல வீடுகள் பாதிக்கப்பட்டன. இதனால்  அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான நிவாரன உதவிகள் தொடர்பாக இதன் போது ஆளுநரிடம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா எடுத்துரைத்தார்.

காத்தான்குடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவுகளை பிரதேச செயலகம் மற்றும் பள்ளிவாயல்கள்,  சமூக அமைப்புக்கள் ஊடாக வழங்குகிவருவதாக  ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக ஆளுநர் 500  உலர் உணவு பொதிகளை  மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தார்.

  • மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts