செங்கடலில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நிறுத்தாவிட்டால், அவர்களுக்கு
எதிராக தொடர்ச்சியாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க ஜனாதிபதி
ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
செங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர் கப்பலான USS Carney நேற்று (13)
காலை யேமனின் ரேடார் கட்டமைப்பை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல்களை
மேற்கொண்டுள்ளது.
அத்துடன் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட கூட்டு இராணுவத்தினர் தற்போது
ஹௌதி கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து 30-க்கும் அதிகமான தாக்குதல்களை
மேற்கொண்டுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.
யேமன் தற்போது பெயரளவில் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டாலும் நாடு ஹௌதி
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
நேற்று மீண்டும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு ஒரு சில மணி நேரங்களின் பின்னர்
யேமனிலுள்ள ஆயிரக்கணக்கானவர்கள் அந்நாட்டின் தலைநகரமான சனாவில் கூடி
அமெரிக்கா, பிரித்தானியாவிற்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 11ம் திகதி இரவு அமெரிக்க மற்றும் பிரித்தானிய கூட்டு இராணுவம் யேமனின்
தலைநகர் சனா உள்ளிட்ட ஹௌதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது டிரோன்
ஏவுகணை தாக்குதல் மேற்கொண்ட நிலையில், செங்கடலுக்கு அருகே புதிய யுத்தப்பதற்றம்
உருவாகியுள்ளது. எனினும், யேமன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அமெரிக்கா
நியாயப்படுத்தியுள்ளது.
செங்கடலில் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள்
மேற்கொள்ளும் தாக்குதல்களைத் தடுத்து, அதனைக் குறைக்கும் நோக்கில் யேமன் மீது
தாக்குதல் மேற்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதுவர் லிண்டா
தோமஸ் – கிரீன்பீல்ட் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஹௌதி கிளர்ச்சியாளர்களை தாக்குவதற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி
ஜோ பைடன் அந்நாட்டு காங்கிரஸின் அனுமதியை கோரவில்லையென சர்வதேச
ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் ஜோ பைடன் மீது காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் எதிர்ப்பு
வலுப்பெற்றுள்ளதாகவும், சர்வதேச மோதல்களின் போது மேற்கொள்ளப்படும்
இராணுவத் தலையீட்டிற்கு காங்கிரஸின் அனுமதி அவசியம் எனவும் கட்சி உறுப்பினர்கள்
தெரிவித்துள்ளனர்.