Tamil News Channel

100 ஆண்டுகள் பழமையான பதக்கங்கள் மக்கள் பார்வைக்கு..!

1924 ஆம் ஆண்டு பாரிஸ் விளையாட்டுப் போட்டிகளில் தனது தனித்துவமான சாதனையை நிகழ்த்திய பின்லாந்து வீரர் பாவோ நூர்மி (Paavo Nurmi) வென்ற ஐந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களும் பாரிஸில் அடுத்த மாதம் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.

ஜூலையில் நடைபெறவிருக்கும் பாரிஸ் விளையாட்டுகளைக் குறிக்கும் வகையில் இப்பதக்கங்கள் மார்ச் 27 முதல் செப்டம்பர் 22 வரை காட்சிப்படுத்தப்படவுள்ளது.

செயின் ஆற்றுப் பகுதியில் இடது கரையில் உள்ள மொன்னே டி பாரிஸ் அருங்காட்சியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள டி ஒ டி ஆர்ஜண்ட் , டி பரவுன்ஸ்”D’or, d’argent, de bronze” (தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம்) எனப்படும் ஒலிம்பிக் பதக்கங்களின் ஒரு பெரிய கண்காட்சியின் ஒரு பகுதியாக இப்பதக்கங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

“த ஃப்ளையிங் ஃபின்” (The Flying Finn) என்ற புனைப்பெயர் கொண்ட நூர்மியின் ஐந்து பதக்கங்கள் ஒரு விளையாட்டுப் போட்டியில் வென்ற அதிக தடகள தங்கங்கள் ஆகும்.

1500 மீட்டர், 3000 மீட்டர், தனிநபர் நகர்வல ஓட்டப் போட்டி, அணிநிலை 3000 மீட்டர் போட்டி மற்றும் அணி நிலை நகர்வலப் போட்டி ஆகியவற்றிலே தங்கப் பதக்கங்களை பாவோ நூர்மி வென்றிருந்தார்.

நூர்மியின் பேரன் மிகா நூர்மி (Mika Nurmi) மற்றும் நான்கு முறை ஒலிம்பிக் சாம்பியனான பின்லாந்து வீரர் லாஸ்ஸே விரென் (Lasse Viren) ஆகியோர் இக்கண்காட்சி விழாவில் விருந்தினர்களாக வருவார்கள் என்று உலக தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜூலையில் பாரிஸ் விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் பரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts