எரிபொருள் விலை உயர்வுக்கு காரணமாகியுள்ள விநியோக பற்றாக்குறைக்கு தீர்வு வழங்கும் நோக்கில், கச்சா எண்ணெய் மற்றும் டீசல் ஆகியவற்றை 100 மில்லியன் பீப்பாய்களை விடுவிக்க G7 நாடுகள் இணங்கியுள்ளன.
அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட இந்த நாடுகளின் குழு, வரும் நாட்களில் பெருமளவு டீசல் இருப்புகளும் இதன் கீழ் சந்தைக்கு விடுவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னர் அமெரிக்க நுகர்வோருக்கான எரிபொருள் விலையை கட்டுப்படுத்துவதற்காக டீசல் ஏற்றுமதியை தடை செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னர் அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
எனினும், அதன் மூலம் மற்ற நாடுகளில் எரிபொருள் விலை மேலும் உயர வாய்ப்பு காணப்பட்டது.
கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு G7 நாடுகள், உறுப்பு நாடுகள் ஒன்றுக்கொன்று இடையே எரிசக்தி மற்றும் எரிசக்தி உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்துவதை தவிர்க்க இப்போது இணங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளன.
G7 அமைப்பில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகியவை அடங்கும், ஐரோப்பிய ஒன்றியமும் இதன் கூட்டங்களில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகள் தமது கையிருப்பில் உள்ள பிரமாண்டமான டீசல் இருப்புகளை சந்தைக்கு விடுவிக்க இணங்காவிட்டால் அமெரிக்காவிலிருந்து டீசல் ஏற்றுமதி செய்வதை தடை செய்வதாக ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்திருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை சமூக ஊடகங்கள் வாயிலாக கருத்து தெரிவித்த அவர், “ஐரோப்பிய நாடுகள் இப்போது தமது அதிகளவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள டீசல் இருப்புகளில் இருந்து பிரமாண்டமான அளவை விடுவிக்க இணங்கியுள்ளன. இந்த செயல்முறை உடனடியாக ஆரம்பமாகும்” என்று கூறியிருந்தார்.
அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் போக்குவரத்து துறையில் விலைகள் உயரும் போது அமெரிக்க விவசாயிகள், லொறி சாரதிகள் மற்றும் வர்த்தகர்கள் “அந்த சுமையை தோளில் சுமந்து ஆதரவற்றவர்களாக இருக்க வேண்டியதில்லை” என்று அவரது திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசன்ட் குறிப்பிட்டுள்ளார்.
சரக்கு போக்குவரத்து தொழில் மற்றும் விவசாயத்தில் டீசல் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், டீசல் விலை உயர்வு உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விலும் நேரடியாக தாக்கம் செலுத்துகிறது.
எனினும், G7 தலைவர்களின் சந்திப்புக்கு பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவிக்கையில், சர்வதேச எரிசக்தி முகமை (IEA) ஒருங்கிணைப்பின் கீழ் நான்கு மாதங்களுக்குள் “100 மில்லியன் பீப்பாய்கள் வரை” கையிருப்பை விடுவிக்க இந்த குழு இணங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.








