ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பாக ரூ. 100 மில்லியன் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (4) பிற்பகல் 2:09 மணியளவில் தமது விசாரணை அதிகாரிகளால் ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்தது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்கான விமானங்களை கொள்வனவு செய்வது தொடர்பாக இலஞ்சமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படும் நிதி தொடர்பான விசாரணை அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்டெட் (Standard Chartered) வங்கியில் பிஸ் சொலியுசன் (BIZ Solutions INC) என்ற பெயரில் பராமரிக்கப்படும் கணக்கிற்கு €1,454,651.24 இலஞ்சமாக கிடைத்துள்ளதாக ஆணைக்குழு குற்றம் சாட்டுகிறது.
அந்த தொகையில் இருந்து 800,000,அமெரிக்க டொலர் இலங்கை வர்த்தகருக்கு சொந்தமான சப்ரி விஷன் ஹோல்டிங்ஸ் (Sabre Vision Holdings LTD) என்ற நிறுவனத்தின் பெயரில் சிங்கப்பூரில் உள்ள OCBC வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த நிதிக்கு ஈடாக, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில் இலங்கை வர்த்தகர் ஒருவரிடமிருந்து நாமல் ராஜபக்ச மொத்தமாக ரூ. 100 மில்லியன் பெற்றதாக ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.
பிரான்ஸைச் சேர்ந்த ஏர்பஸ் Airbus நிறுவன அதிகாரிகள் ஆணைக்குழுவிற்கு வழங்கிய வாக்குமூலங்கள், இலங்கை வர்த்தகரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலம், விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிற தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்தே இந்த கைது மேற்கொள்ளப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாமல் ராஜபக்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








