ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்று முதல் முறையாக கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.
இதையடுத்து, பெங்களூர் சின்னசாமி மைதானத்திற்கு அருகில் நடந்த வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக வெற்றி கொண்டாட்டம் சோகத்தில் முடிந்திருந்தது.
இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டதோடு, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இந்திய ரூ.10 லட்சம் இழப்பீடும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், கப்பன் பார்க் பொலிஸ் நிலையத்தில் ஏ.எம்.வெங்கடேஷ் என்பவர் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்தார். இந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் முன்னர் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து, விசாரணை நடத்த பரிசீலனை செய்யப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதேபோன்று, கப்பன் பார்க் பொலிஸ் நிலையத்தில் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக இந்திய மற்றும் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் கைது செய்யப்படலாம் என இந்திய ஊடகங்கள் சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளன.