2024 ஐசிசி டி20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியானது உத்தியோகப்பூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் செயின்ட் வின்சென்ட்டில் பங்களாதேஷ் நெதர்லாந்தை 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
குழு Dயில் பங்களாதேஷ் நான்கு புள்ளிகளை எட்டிய இந்த வெற்றியின் அர்த்தம், இலங்கை இனி முதல் மூன்று இடங்களுக்குள் வர முடியாது போனதாகும்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இலங்கை அணியின் 2024 டி20 உலகக் கிண்ண பயணம் ஒரு சோகமான ஆரம்பத்துடன் தொடங்கியது. அந்தப் போட்டியில் அவர்கள் 77 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர்.
பின்னர், பங்களாதேஷுடனான ஒரு குறுகிய தோல்வியும், நேபாளத்துடனான போட்டி மழையால் பாதிக்கப்பட்டமையும் இலங்கையின் 2024 உலகக் கிண்ண ஆசை தோல்வியின் விளிம்புக்கே சென்றது.
தற்போது வெறும் 1 புள்ளி மற்றும் நிகர ரன் ரேட் -0.777 உடன் குழு Dயில் இறுதி இடத்தில் இருக்கும் இலங்கை அணி, இறுதியாக ஆறுதல் போட்டியாக ஜூன் 16 அன்று நெதர்லாந்தை எதிர்கொள்ள காத்திருக்கிறது.
அந்த போட்டியின் பின்னர் அவர்கள் நாடு திரும்ப வேண்டிய நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர். இது அவர்களுக்கான ஏமாற்றம் மட்டுமல்லாது எத்தனை தோல்விகளை தழுவினாலும், இலங்கை அணியுடன் எப்போதும் துணை நிற்கும் அவர்களின் ரசிகர்களுக்கான பெரிய ஏமாற்றம் தான்.