ஐபிஎல் 2025 தொடருக்கான வீரர்கள் ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டபோது 13 வயதாகும் இளம் வீரர் சூரியவன்சியின் பெயர் இருந்ததைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர்.
மிகச் சிறந்த வீரரான அவரை எந்த அணி வாங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சூரிய வன்சியை வாங்கியது. அவரை வாங்குவதற்காக ராஜஸ்தான், டெல்லி ஆகியன போட்டியிட்டன.
கடந்த மாதம் சென்னையில் அவுஸ்திரேலியா அண்டர்-19 அணிக்கு எதிராக அவர் இந்திய அண்டர்-19 அணிக்காக அதிரடியாக விளையாடினார். அந்த டெஸ்ட் போட்டியில் 58 பந்துகளில் அவர் அதிரடியான சதத்தை அடித்தார். அதன் வாயிலாக அண்டர்-19 டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமான சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார். அந்தப் போட்டியில் 58 பந்துகளில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் சதத்தை அடித்தார்.
கடந்த ஜனவரி மாதம் ரஞ்சிக் கோப்பையில் இளம் வயதில் அறிமுகமான இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் சாதனைகளையும் அவர் உடைத்திருந்தார். அதன் காரணமாக திறமையாக செயல்படும் அவரை ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த இளம் வீரர் முஷீர் கான் கடந்த அண்டர்-19 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி இந்தியா ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக ரஞ்சிக் கோப்பையில் மும்பைக்காக அறிமுகமான அவர் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக விளையாடி சம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.