2025 பாதீடுக்குப் பின்னரான கருத்தாடல்(“POST BUDGET FORUM 2025”) இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு சினமன் லைப் உணவகத்தில் நடைபெற்றது.
கடந்த அரசாங்கங்களின் தவறான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வங்குரோத்தடைந்ததாகவும் தற்போது நாடு தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட தகுதிக்கான காலத்தில் இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
இந்த சூழ்நிலையில் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அடிப்படை நடவடிக்கை இந்த ஆண்டு பாதீடு ஊடாக எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு மூலம் கிடைத்த மூன்று வருடச் சலுகைக் காலத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்தி, 2028 ஆம் ஆண்டுக்குள் சரியான பொருளாதார முகாமைத்துவத்தின் மூலம் கடன் திருப்பிச் செலுத்தும் திறனை அடைய அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும் ஜனாதிபதி அநுர திசாநாயக்க தெரிவித்தார்.
பொருளாதாரத்தை விஸ்தரித்து பொருளாதாரத்தைக் கிராமங்களுக்குக் கொண்டு செல்வதன் மூலமும், குடிமக்களைப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் குடிமக்கள் பயனடையும் திறனை அதிகரிக்க முடியும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.
பொருளாதாரத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட குழுக்களை மீண்டும் பொருளாதாரத்திற்குள் கொண்டு வருவதன் மூலம் கிராம மட்டத்தில் சிறிய பொருளாதார அலகுகளை உருவாக்க தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரை உருவாக்குவதற்கான ஆர்வத்தை நாட்டில் உருவாக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதே அரசாங்கத்தின் குறிக்கோள் என்றும் தெரிவித்தார்.
அரசியல் அதிகாரத்தை ஊழல் இல்லாத இடமாக மாற்றியுள்ளதாகவும், கையூட்டல் கொடுக்காத கலாச்சாரத்தை உருவாக்குவது குடிமக்களின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
துறைமுக மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த ஆண்டு திறமையான கொள்கலன் பரிமாற்ற மையத்தை உருவாக்குவதில் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்காக நகர வர்த்தக நாமத் திட்டங்கள் (City Brand) செயல்படுத்தப்பட்டு வருவதோடு அனுராதபுரம், யாபஹுவ மற்றும் யாழ்ப்பாணம் போன்ற நகரங்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களும் வகுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.