22 வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்குற்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள 67 மனுக்கள் தொடர்பில் நேற்று (01) காலை 10.00 மணியளவில் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், நேற்று இரவு 10.30 மணி வரை விசாரணைகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினம் மனுதாரர் தரப்பின் மேலதிக வாதங்கள், இடையீட்டு மனுதாரர்களின் வாதங்கள் மற்றும் சட்டமா அதிபரின் வாதங்கள் முன்வைக்கப்படவுள்ளன.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில், அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதியரசர்களை உள்ளடக்கிய 5 பேர் கொண்ட நீதியரசர் குழுவின் முன்னிலையில் நேற்று மனுக்கள் விசாரணை ஆரம்பமானது.

விசாரணை ஆரம்பமானபோது, மனுதாரரான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதாவது, “இது நேரடியாக நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் சட்டமூலமாகும். இதன் மூலம் பிரதம நீதியரசரின் பதவிக்காலம் 2 ஆண்டுகளால் நீடிக்கப்படுகிறது.

எனவே, முரண்பாடு ஏற்படக்கூடிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த சட்டமூலம் தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதியரசர்களையும் உள்ளடக்கிய முழு நீதிமன்ற குழுவின் முன்னிலையில் விசாரிக்குமாறு” கோரினார்.

அதனைத் தொடர்ந்து, மேலும் சில மனுதாரர் தரப்பினர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ், அலி சப்ரி, ஜெஃப்ரி அலகரத்தினம், எராஜ் சில்வா, ஸ்ரீநாத் பெரேரா, அனுர மெத்தெகொட, மைத்ரி குணரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகளும் அந்த கோரிக்கை தொடர்பில் மேலதிக வாதங்களை முன்வைத்தனர்.

இதன்போது சட்டமா அதிபர் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன , “அரசியலமைப்பின் 132(3) ஆவது பிரிவின்படி உச்ச நீதிமன்ற நீதியரசர் குழுவை நியமிக்கும் அதிகாரம் பிரதம நீதியரசருக்கே வழங்கப்பட்டுள்ளது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதியரசர் குழுவின் அமைப்பை தீர்மானிக்கும் முழு அதிகாரமும் பிரதம நீதியரசரிடமே உள்ளது. அதில் வெளித் தரப்பினர் தலையிட அதிகாரம் இல்லை எனவும் சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்ட அனைத்து வாதங்களையும் கருத்தில் கொண்ட பிரதம நீதியரசர் தலைமையிலான 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதியரசர் குழு, தனது உத்தரவை பிரகடனப்படுத்தி, “சம்பந்தப்பட்ட மனுக்களை முழு நீதிமன்ற குழுவின் முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பு முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது” என குறிப்பிட்டது.

அதன்படி, பெயர் குறிப்பிடப்பட்டிருந்த 5 பேர் கொண்ட நீதியரசர் குழுவின் முன்னிலையில் மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

மனுதாரரான பேராசிரியர் ஜி.எல்.பீரி  சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றத்தில் வாதிடுகையில், “பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தாலும் கூட, ஒரு அரசாங்கத்தால் நீதியரசர்களின் சுதந்திரமான கடமையாற்றுவதற்கான சூழலில் தலையிட முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து பல சட்டத்தரணிகள் தமது வாதத்தை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here