கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கும்புறுமூலை கடற்கரை வீதியானது 275 மில்லியன் செலவில் காபெட் வீதியாக புணரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பை ஏற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரண்டு நாள் விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சர் இணைந்து இப் பணியைஆரம்பித்து வைத்திருந்தனர்.
குறித்த பிரதேசத்தில் மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறைக்கு மிகவும் பங்களிப்பு செய்யக்கூடிய முக்கிய போக்குவரத்து வீதிகளில் 3.4KM நீளமான இவ் வீதியினை புணரமைத்து தருமாறு அப்பிரதேச மீனவர்கள் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருக்கு கோரிக்கை முன்வைத்தனர்.
இதன் அடிப்படையில் குறித்த வீதியானது காபெட் வீதியாக செப்பனிடும் பணிகளை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் திரு.ரஞ்சித் ரூபசிங்க, கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் தம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.