65 நாட்கள் தொடர்ச்சியான ‘துருவ இருள்’: ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனம்!
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள உட்கியாக்விக் (Utqiagvik) நகரத்தில், இந்த ஆண்டிற்கான கடைசி சூரிய அஸ்தமனம் அண்மையில் நிகழ்ந்துள்ளது. இதன் பின்னர், நகரம் அடுத்த 65 நாட்கள் தொடர்ச்சியான இருளான ‘துருவ இரவு’ (Polar Night) நிலையை எதிர்கொள்ளவுள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முன்னர் பரோ (Barrow) என அழைக்கப்பட்ட இந்த நகரம், ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே சுமார் 300 மைல்கள் தொலைவில், அலாஸ்காவின் வடக்கு முனையில் அமைந்துள்ளது. இது வட அமெரிக்காவின் வடக்கேயுள்ள குடியிருப்பு பகுதியாகவும் கருதப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை (18) சூரியன் மறைந்ததைத் தொடர்ந்து, உட்கியாக்விக்கில் அடுத்த சூரிய உதயம் 2026 ஜனவரி 22 ஆம் திகதியன்று மட்டுமே காணப்படும்.
பூமி தனது அச்சில் சாய்ந்திருப்பதாலேயே இத்தகைய நீண்டகால இருள் உருவாகிறது. குறிப்பாக செப்டம்பர் முதல் மார்ச் வரை வட அரைக்கோளம் சூரியனிலிருந்து விலகிச் செல்லும் காலத்தில், குளிர்காலச் சங்கிராந்தி (December solstice) காலத்தில் வட துருவம் மிகக் குறைந்த ஒளியையே பெறுகிறது.
துருவ இரவு காலத்தில் வானிலை மிகக் கடுமையாகும் என வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. சூரிய ஒளியின் பற்றாக்குறையால், நகரத்தில் வாழும் சுமார் 5,000 குடியிருப்போரின் அன்றாட வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
எனினும், இந்த இருள் தற்காலிகமானது. வசந்தகாலம் நெருங்கும் போது ஒளியும் மீண்டும் திரும்பும். மேலும், மே மாத நடுப்பகுதி முதல் ஆகஸ்ட் ஆரம்பம் வரை, உட்கியாக்விக்கில் சூழல் முற்றிலும் மாற்றமடைந்து, சூரியன் ஒருபோதும் மறையாத “மிட்நைட் சன்” எனப்படும் நீண்ட பகற்பொழுது நிலவும் என்று அறிக்கைகள் கூறுகின்றன.
![]()