வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றப்பட்டவர்களுக்கு ஒரு வருடத்துக்குள் பணத்தை திருப்பி செலுத்துமாறு ரெயின்போ மேன்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன உரிமையாளருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நிறுவனம் ரொமானியா நாட்டில் வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக உறுதியளித்து சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக பணத்தை பெற்றுக்கொண்டுள்ளது. எவ்வாறாயினும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

இந்த விடயம் தொடர்பாக ரெயின்போ மேன்பவர் நிறுவன உரிமையாளர் கடந்த வருடம் அக்டோபர் 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பில் உரிமையாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள்,சந்தேக நபர் 100 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பதாகவும் பிணை கிடைத்து 2 வருடங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை வழங்க அவகாசம் கோரியும் வாதாடியுள்ளனர்.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரு வருடத்திற்குள் பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் இது அவர் பிணை பெறுவதற்கான ஒரு நிபந்தனையாகும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் 500,000 ரூபாய் ரொக்கப் பிணை வழங்க வேண்டும், என்றும் தலா ரூ. 5 மில்லியன் சரீரப்பினையுடன் நால்வர் பிணை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர் நீதிமன்றத்தில் ஆஜராகாத பட்சத்தில் பிணை அளித்தவர்களிடமிருந்து ரூ. 50 மில்லியன் பறிமுதல் செய்யப்படும் என்றும் நீதிபதி அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் பணத்தைத் திருப்பிச் செலுத்தவில்லை எனில் பிணையை இழந்து மீண்டும் சிறை வைக்கப்படுவார் என நீதிமன்றம் மேலும் எச்சரித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்பதோடு அவரது கடவுச்சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here