இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத் தேவைகள் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டவிரோத ட்ரோன் இறக்குமதிகள் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் மற்றும் குறிப்பிட்ட எடைப் பிரிவுகளை மீறும் ட்ரோன்கள் தற்போதுள்ள விதிமுறைகளின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி நிமித்தமாக ட்ரோன்களை இயக்கும் விமானிகளும் உரிமம் பெற வேண்டும் என்றும் அவர்களுக்குத் கோட்பாட்டுத் தேர்வுகள், மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் பாதுகாப்புச் சோதனைகள் என்பன நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ட்ரோன்கள் மற்றும் அதன் பாகங்களை இறக்குமதி செய்யும், விற்பனை செய்யும் மற்றும் பழுதுபார்க்கும் வணிக ஸ்தாபனங்களை காவல்துறை சோதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் அனுமதியின்றி இயக்குவது என்பன தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.








