இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையையும் மக்களது வாழ்வாதார நிலைமைகளையும் கருத்திற்கொண்டு இம்முறை முன்வைத்துள்ள வரவு – செலவுத் திட்டத்தை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, யாழ். நூலகத்துக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான தமது எதிர்பார்ப்பையும் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை டக்ளஸ் தேவானந்தா எழுதிவைத்துள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

“குறித்த வரவு – செலவுத் திட்டத்தின் அடிப்படையில் வட மாகாணத்தில் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ள விடயங்கள் தொடர்பில் தங்களது அவதானத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

குறிப்பாக, யாழ்ப்பாணம் பொது நூலகத்தை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை நீங்களே உங்களது உரையில் கூறியிருக்கிறீர்கள். அதற்கென இம்முறை 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளீர்கள்.

அதனைப் பயன்படுத்தி நூலகத்தை முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்துவதன் மூலமாக இன்றைய மற்றும் எதிர்கால தலைமுறையினர் இலகுவாக இந்த நூலகத்தைப் பயன்படுத்தும் நிலையை உருவாக்க முடியும் என்பதுடன், ஆவணங்களைப் பாதுகாத்துப் பராமரிப்பதற்கும் இடவசதியைப் பேணுவதற்கும் வசதியாக இருக்கும்.

அதேபோன்று, கிளிநொச்சியில் அமைந்துள்ள நூலகத்துக்குச் சொந்தமான காணி இராணுவத்தின் வசம் இருந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்னர் குறித்த காணியின் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டு, கரைச்சி பிரதேச சபையால் கட்டிடம் கட்டப்பட்டபோதிலும் குறித்த கட்டிடம் மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது.

எனவே, குறித்த கட்டிடத்துக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி நூலகத்தை மக்கள் பாவனைக்குக் கையளிப்பதுடன், நூலகத்துக்கான எஞ்சிய காணியை விடுவிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்’’ – என்றுள்ளது.

முன்பதாக கடந்த காலங்களில் அழிக்கப்பட்ட யாழ் நூலகத்தினை, அழிவின் சின்னமாக பாதுகாக்க வேண்டும் என்று சில தமிழ் தரப்புக்கள் வலியுறுத்திய போதிலும், அறிவின் மையமாக உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்து, அப்போது ஆட்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் தற்போதைய நூலகம் உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here