துருக்கியில் நாளை மறுநாள் (15) ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்திப்பதற்காக காத்திருப்பேன் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் இரு நாடுகளையும் வலியுறுத்தி வருகின்றனர்.
போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு முன்பு நேற்று (12) தொடங்கி 30 நாட்களுக்கு நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை ரஷ்யா ஏற்க வேண்டும் என்று உக்ரைன் கோரியது. ஆனால் ரஷ்யா இந்த திட்டத்தை நிராகரித்து நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்துள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி கூறுகையில், ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று நான் இன்னும் நம்புகிறேன். நாளை மறுதினம் துருக்கியில் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்காக தனிப்பட்ட முறையில் காத்திருப்போம் என்று கூறியிருக்கிறார்.
இதேவேளை நாளை மறுதினம் (15) துருக்கியில் உக்ரைன் ஜனாதிபதி உடனான பேச்சுவார்த்தைக்காக ரஷ்யா ஜனாதிபதி புட்டின் செல்வாரா என்பது குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதேவேளை உக்ரைன் மீது நேற்று முன்தினம் (11) இரவு ரஷ்யா கடுமையான வான்வழி தாக்குதலை நடத்தி உள்ளது. உக்ரைனில் 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி இரவு நேர தாக்குதலில் ஈடுபட்டதாக உக்ரைன் விமானப்படை குற்றம்சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








