இலங்கையின் கல்வித் துறையின் வரலாற்றில் இதுவரை இடம்பெறாத மிகப்பெரிய கவனக்குறைவு சம்பவம் யாழ்ப்பாணம் நெல்லியடியில் பதிவாகியுள்ளது.
நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் அமைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை மத்திய நிலையத்தில், உயிரியல் பாடத்தை எழுதிய 21 மாணவர்களின் முதலாம் பகுதி (பல்தேர்வு) விடைத்தாள்கள் திருத்தல் பணிகளுக்காக அனுப்பப்படாமல் தவறவிடப்பட்டுள்ளன.
தற்போது நாடு முழுவதும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மத்திய நிலையத்தில் உயிரியல் பல்தேர்வு வினாதாள் பரீட்சை சீராக நடைபெற்று, மாணவர்கள் தங்கள் விடைத்தாள்களை வழமையான முறையில் சமர்ப்பித்திருந்தனர்.
விதிகளின்படி, பரீட்சை முடிந்த அதே தினமே அந்த விடைத்தாள்கள் பாதுகாப்புடன் திருத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட வேண்டியது.
ஆனால், பரீட்சை நிலையப் பணியாளர்களின் கடுமையான கவனக்குறைவினால், அவை அனுப்பப்படாமல் மூன்று நாட்கள் அங்கேயே காகிதப் பொட்டலங்களுடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையில் கிடந்தமை பின்னர் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தாமதம் காரணமாக, இப்போது அந்த விடைத்தாள்களை திருத்தலிற்காக அனுப்ப இயலாத நிலை உருவாகியுள்ளது.
உயர்தரப் பரீட்சையில், குறிப்பாக உயிரியல் போன்ற போட்டி மிகுந்த பாடங்களில், சிறிய புள்ளிகள் கூட மாணவர்களின் பல்கலைக்கழக வாய்ப்பையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் நிலையிலுள்ளதால், சம்பந்தப்பட்ட 21 மாணவர்களும் குறிப்பிடத்தக்க அளவு புள்ளிகளை இழக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த சம்பவம், மாணவர்கள் ஆண்டுகளாக சிரமப்பட்டு படித்த கல்விப் பயணத்தை பெருமளவு பாதித்ததுடன், அவர்களை கடுமையான மன அழுத்தத்திற்கும் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பான தகவல் கல்வித் திணைக்களத்துக்குக் கிடைத்த உடனேயே, குற்றம் புரிந்த பரீட்சை நிலைய அதிகாரிகள் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக திணைக்கள ரீதியான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



