இணைய உலகில் வீடியோ அழைப்புகள் மற்றும் உடனடி செய்திகளுக்குப் பெயர் பெற்ற ஸ்கைப் (Skype), 21 ஆண்டுகால சேவையை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
ஒரு காலத்தில் கோடிக்கணக்கான பயனர்களைக் கவர்ந்த இந்த தளம், 2025 மே மாதம் முதல் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Skype உச்சமும் வீழ்ச்சியும்
Skype ஒரு காலத்தில் 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டு டிஜிட்டல் தகவல் தொடர்பில் முன்னணி வகித்தது.
ஆனால், சமீபத்திய மைக்ரோசாப்ட் அறிக்கையின்படி, 2023-ல் ஸ்கைப்பின் பயனர்கள் எண்ணிக்கை 36 மில்லியனாக குறைந்தது.
பயனர்களின் எண்ணிக்கை சரிவால், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப்பை மூடிவிட்டு, மைக்ரோசாப்ட் டீம்ஸ் (Microsoft Teams) மீது கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.
மைக்ரோசாப்ட் டீம்ஸ்: புதிய தகவல் தொடர்பு மையம்
“இலவச நுகர்வோர் தகவல் தொடர்பு சேவைகளை எளிதாக்கி, வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப விரைவாக மாற, ஸ்கைப்பை 2025 மே மாதத்தில் நிறுத்த உள்ளோம்” என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
“Microsoft Teams (இலவசம்) என்ற நவீன தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு மையத்தில் கவனம் செலுத்த உள்ளோம்” என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
ஸ்கைப்பின் பயனர்கள் எளிதாக மைக்ரோசாப்ட் டீம்ஸ்-க்கு மாறுவதற்கு, மைக்ரோசாப்ட் எளிய வழிமுறைகளை வழங்குகிறது.
பயனர்கள் தங்கள் ஸ்கைப் கணக்கைப் பயன்படுத்தி மைக்ரோசாப்ட் டீம்ஸில் உள்நுழையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தகவல் தொடர்பில் மாற்றம்
இந்த நடவடிக்கை மைக்ரோசாஃப்ட்டின் மூலோபாயத்தில் ஒரு முக்கிய மாற்றத்தை குறிக்கிறது.
மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் மூலம், பயனர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு அனுபவத்தை வழங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.