T20 உலகக் கிண்ணத்திற்கான தற்காலிக அணிப் பட்டியலை அனுப்புவதற்கான காலக்கெடு நெருங்கிவிட்ட நிலையில், 15 பேர் கொண்ட இந்திய அணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா மற்றும் தலைமை தெரிவுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அண்மையில் சந்தித்து அணியின் அமைப்பு குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
தகவல்களின்படி, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான ஐபிஎல் போட்டிக்காக அகர்கர் டெல்லிக்கு வந்ததாகவும், இதன்போது சர்மாவுடன் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகின்றது.
இந்த சந்திப்பில் அணியில் யாரை இணைத்துக்கொள்வது யாரை நீக்குவது என்பது குறித்து தீவிரமான ஆராய்ந்துள்ளதுடன், 15 பேர் கொண்ட அணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இந்திய அணியின் தலைவராக ரோஹித் சர்மா செயற்படுவார் என்பதை உறுதிப்படுத்தினார்.
எனினும், 15 பேர் கொண்ட அணியை அறிவிப்பதில் தேர்வாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டிருந்ததாகவும் தற்போது அணி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சர்மா தலைமையில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (WK), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே,ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ். அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், ஷுப்மான் கில், சஞ்சு சாம்சன் (WK), ரின்கு சிங் மற்றும் கலீல் அகமது ஆகியோர் அடங்கிய அணி அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.