ஒரு நாள் மற்றும் T20 அணியின் தலைவர் பதவியில் இருந்து நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.
அத்துடன், 2024-25 ஆண்டுக்கான மத்திய ஒப்பந்தத்தையும் அவர் நிராகரித்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் பேரவை வில்லியம்சனின் முடிவை அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது.
நடப்பு T20 உலகக் கிண்ண தொடரில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் கேன் வில்லியம்சன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
T20 உலகக் கிண்ண வரலாற்றில் நியூசிலாந்து அணி முதல் சுற்றுடன் வெளியேறிய முதல் சந்தர்ப்பமும் இதுவாகும்.
எவ்வாறாயினும், “கேன் வில்லியம்சன் 2024-25 ஆண்டுக்கான மத்திய ஒப்பந்தத்தை நிராகரித்த போதிலும் மூன்று வடிவ போட்டிகளில் தனது நீண்ட கால உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளார்.”
தனது முடிவின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது ஆர்வத்தை இழந்துவிட்டதாக விளக்கக் கூடாது எனவும் எதிர்காலத்தில் மத்திய ஒப்பந்தத்தை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் வில்லியம்சன் கூறியுள்ளார்.
அணியை முன்னோக்கி கொண்டுச் செல்வதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் அதற்காக தொடர்ந்தும் பங்களிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவது இந்த நேரத்தில் தனக்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் “நியூசிலாந்திற்காக விளையாடுவதை பொக்கிஷமாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.