நடப்பு T20 உலகக் கிண்ண தொடரில் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் ஆப்கானிஸ்தான் தனது சிறப்பான பந்து வீச்சு மூலம் 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய இந்தப் போட்டி செயின்ட் வின்சென்ட்டில் இடம்பெற்றிருந்தது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசியது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஆப்கானிஸ்தான் அணியின் முதல் விக்கெட் 16வது ஓவரின் முடிவில் 118 ஓட்டங்களை பெற்றிருந்த போதே வீழ்த்தப்பட்டது.
எனினும், கடைசி ஐந்து விக்கெட்டுகளும் 30 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது.
அந்த அணி சார்பில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 60 ஓட்டங்களையும், இப்ராஹிம் சத்ரான் 51 ஓட்டங்களையும் வெற்றிருந்தனர்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலியா அணி சார்பில் பட் கம்மின்ஸ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இது அவரின் இரண்டாது T20 ஹாட்ரிக் விக்கெட் ஆகும்.
இந்நிலையில், 149 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 127 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது.
ஆரம்பம் முதலே அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்தது.
ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அவுஸ்திரேலியா அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
எனினும், கிளென் மேக்ஸ்வெல் மட்டும் நிதானமாக துடுப்பெடுத்தாடி 59 ஓட்டங்களை குவித்திருந்தார்.
அவுஸ்திரேலிய அணியின் எட்டு வீரர்கள் ஒன்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்திருந்தனர்.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் குல்பாடின் நைப் நான்கு விக்கெட்டுகளையும், நவீன்-உல்-ஹக் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக குல்பாடின் நைப் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.