எம்மில் அனைவரும் காலையில் எழுந்து தங்களது நாளாந்த கடமைகளை நிறைவு செய்த பிறகு, பொருள் ஈட்டுவதற்கான பணிகளில் கவனம் செலுத்துவோம். இந்தப் பணி நாள் முழுதும் நீடிக்கும். பிறகு மாலை வேளையிலோ அல்லது இரவு நேரத்திலோ வீடு திரும்பியவுடன் மீண்டும் தங்களது சொந்த பணிகளை நிறைவேற்றிய பிறகு உறங்குகிறோம். இத்தகைய திட்டத்தின்படி இயங்கும் எம்மால் வெற்றிகளை நோக்கி பயணிக்கிறோமே தவிர.. வெற்றிகளை அடைய முடிவதில்லை. இந்த தருணத்தில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வெற்றிகளை நோக்கி பயணிக்க வேண்டும் என்றால், அவர்கள் பிரம்ம முகூர்த்த தருணத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்மொழிகிறார்கள்.‌

பிரம்ம முகூர்த்த நேரமா…! அப்படி என்றால் என்ன? என கேட்பவர்களும் உண்டு.‌ பிரம்ம முகூர்த்த நேரத்தை பற்றி கேள்விப்பட்டவர்கள் அதனை நடைமுறையில் சாத்தியப்படுத்த இயலாது என்று கைவிட்டவர்களும் உண்டு.

பிரம்ம முகூர்த்தம் என்பதனை தெரிந்து கொள்வதற்கு முன்.. ஒரு நாள் என்பது அறுபது நாழிகை கொண்டது என்பதும், அதில் சூரிய உதயத்திற்கு முன்னதான மூன்று நாழிகைகள் தான் பிரம்ம முகூர்த்த நேரம் என்றும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வரையறுத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு சூரிய உதயம் காலை ஆறு மணி என வைத்துக் கொள்வோம்.

ஒரு நாழிகை என்பது நாற்பத்தெட்டு நிமிடங்களை கொண்டது. அதனால் பிரம்ம முகூர்த்த நேரம் என்பது அதிகாலை 3:30 மணி அளவில் தொடங்கி 5:15 மணி வரை நீடிக்கிறது. இந்த தருணத்தில் நாம் படுக்கையில் இருந்து விழித்து எழுந்து, காலை கடன்களை நிறைவு செய்த பிறகு, நீராடி, வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி அமர்ந்து ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தை மூச்சடக்கி, ஒருமுகமாக உச்சரிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து முழு முதற் கடவுளான விநாயகர் பெருமானின் மந்திரத்தை அல்லது உங்களுக்கு தெரிந்த விநாயக பெருமானின் பக்தி பாடலை உச்சரிக்க வேண்டும்.

அத்துடன் இன்றைய நாள் முழுவதும் உற்சாகத்துடனும், விழிப்புடனும், இறைவனின் ஆசியுடனும், அருளுடனும் நடைபெற வேண்டும் என பிரபஞ்சத்திடம் வேண்டுகோளை சமர்ப்பிக்க வேண்டும். இந்த கோரிக்கை பிரம்ம முகூர்த்தத்தில் உங்களிடமிருந்து இந்த பிரபஞ்சத்திற்கு கிடைப்பதால்.. இந்த பிரபஞ்சம் உங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அனைத்து வழிகளையும் பயன்படுத்தி உங்களுக்கான சுப பலன்களை கிடைக்கச் செய்யும். இதனால் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் ..‌ சூட்சமமான ஆற்றலை வழங்கும் பிரம்ம முகூர்த்தத்தை உங்களுடைய முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here