அனைத்து தகவல்களையும் அள்ளித் தரும் கூகுள் நிறுவன தேடுபொறி அடுத்த நிலைக்கு அப்டேட் ஆகியுள்ளது. அது என்ன, அதன் சிறப்புகள் என்ன என்பதை பார்க்கலாம்.

சமையல் குறிப்பு தொடங்கி ராக்கெட் சயின்ஸ் வரை என்ன வேண்டுமானாலும் தேடலாம்.. அனைத்து தகவல்களையும் நொடியில் தேடித் தரும் தேடுபொறி தான் கூகுள். வேறு சில சர்ச் என்ஜின்கள் இருந்தாலும், முதலில் நினைவுக்கு வருவதும், அனைவரின் விருப்பத் தேர்வும் கூகுள் தான்.

காரணம், பயன்பாட்டாளருக்கு எளிய முறையில் தகவல்களை தேடித் தருவதாலும், ஃபில்டர்ஸ் எனப்படும் வகைப்படுத்தலில் உள்ள அம்சங்களாலும் கூகுள் இன்றளவும் தன்னை முதலிடத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

அந்த வகையில், அடுத்த பரிணாமத்தை அடைந்து இருக்கிறது கூகுள் தேடுபொறி. ஆம், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் நாம் தேட நினைக்கும் அத்தனை தகவல்களையும் துல்லியமாக, கேள்வி பதில் பாணியில் துறை சார்ந்த வல்லுநர்கள் அனைத்து சந்தேகத்திற்கும் விடையளிக்கும் வகையில் உயர்தொழில்நுட்பத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது கூகுள் தேடு பொறி.

இதன் அறிமுக விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற நிலையில், அதில் பேசிய கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, தகவல் தேடலில் மிகப்பெரிய அத்தியாயத்தை தொடங்கி வைத்திருப்பதாகவும், உலகம் முழுவதையும் இணைக்கும் ரியல் டைம் ஏஐ தேடுபொறியாக இனி கூகுள் இயங்கும் வகையில் தயாராகி இருப்பதாகவும் கூறினார்.

அப்படி இந்த கூகுள் ஏஐ, என்ன வித்தியாசமாக தேடும் என்று கேட்டால், உதாரணத்திற்கு ஒரு சைக்கிளை நீங்களே கழற்றி பழுதுபார்க்க செய்ய நேரிடும் போது அதில் ஏற்படும் சந்தேகத்தை வாய்ஸ் மெசேஜில் கேட்கும் போது அக்கு வேறு, ஆணி வேறாக அத்தனை சந்தேகத்தையும் தீர்த்து வைத்து உங்களை ஒரு எக்ஸ்பர்ட்-ஆக மாற்றிவிடுமாம் இந்த ஏஐ கூகுள் தேடுபொறி..

ஏற்கனவே உள்ள கூகுள் ஜெமினியின் செயல்பாட்டிலும் அப்டேட் செய்து 2.5 வெர்ஷனாக அறிமுகமாகி உள்ளது. ரியல்டைம் டிராவல் அசிஸ்ட்டன்ட், ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்துதல், ஏஐ வீடியோ ஜெனரேஷன் உள்ளிட்டவையும் புதிய பதிப்புகளில் கூடுதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் AR எனப்படும் ஆகுமென்டட் ரியாலிடியின் அடுத்த பதிப்பான ஆன்ட்ராய்டு XR தொழில்நுட்பம் மூலமாக கண்ணாடி அணிந்து கொண்டு ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் அத்தனையையும் நேரடியாக நாமே அனுபவிக்கும் வகையிலான தொழில்நுட்பமும் தற்போது புது என்ட்ரி.

அறிமுக நிலையில் ப்ரீமியம் மற்றும் விஐபி என கட்டண முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏஐ தொழில்நுட்ப சேவைகள் படிப்படியாக அனைத்து தளங்களுக்கும் விரிவு செய்யப்படும் என்றும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here