Tamil News Channel

செயற்கை நுண்ணறிவிற்கும் புத்தரின் போதனைகளுக்குமான தொடர்பு..!

புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் (Artificial Intelligence) இடையிலான தொடர்புகள் குறித்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு அடுத்த வருடம் ஒரு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “உலகம் இன்று விரைவான தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. குறிப்பாக 1945இல் அணுகுண்டு வெடித்தபோது  இனி தொழில்நுட்ப முன்னேற்றம் இருக்காது என்று கருதப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று செயற்கை நுண்ணறிவு வரை சென்றுள்ளோம்.

இந்நிலையில், செயற்கை நுண்ணறிவுக்கும் புத்த மதத்துக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

நம் மனதால் அனைத்தும் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதே புத்தரின் போதனைகள் சுட்டிக்காட்டுகிறது. மனதைக் கட்டுப்படுத்தினால் முன்னேறலாம். மனதைக் கட்டுப்படுத்தாவிட்டால் நமக்கு எதிர்காலம் இல்லை.

மனதைக் கட்டுப்படுத்துவது மனிதனுக்கு மட்டுமே உள்ளது. அதனால்தான் புத்தரின் போதனைகள் மனித குலத்திற்காக போதிக்கப்பட்டள்ளது.

இந்த மனித மனதிற்கு இணையாக செயற்கை நுண்ணறிவு தற்போது வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கு பல்வேறு தகவல்களை இணைக்க முடியும்.ஆகவே, புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பை நாம் ஆராய வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு வேறு மதத்தைப் போதிக்குமானால் அது பௌத்தத்திற்கு அச்சுறுத்தலாக அமையும். எனவே, நாம் அது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.

இந்நிலையில், மக்கள் தங்கள் கையில் இருக்கும் கைபேசியுடன் தர்மத்தை இணைத்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை சிந்திக்க வேண்டும். இது பௌத்தம் மட்டுமன்றி ஏனைய மதத்தினரும் எதிர்கொள்ளும் பிரச்சினையாக மாறியுள்ளது.

எனவே, செயற்கை நுண்ணறிவை கட்டுப்படுத்தவும் புதிய சட்டவிதிகளை நாம் கொண்டு வருகிறோம். தொழில்நுட்ப மேம்பாட்டு சட்ட வரைவை தொழில்நுட்ப அமைச்சு தயாரித்துள்ளதுடன், அதன் கீழ் செயற்கை நுண்ணறிவு மையம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

புத்தரின் போதனைக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சியைத் தொடங்க அடுத்த ஆண்டு ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்க எதிர்பார்க்கப்படுகிறது” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts