இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை செல்லும் வயதுடைய குழந்தைகளிடையே நோய்த்தொற்று வேகமாக அதிகரித்து வருவதுடன் காய்ச்சல், தலைவலி, வாந்தி.போன்றவை ஏற்பட்டு பெரும்பாலானோர் சுமார் 7 நாட்களில் குணமடைந்து வருகின்றனர் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த நோய்த்தொற்று ஏற்பட்டு 3-7 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் தென்படும் எனவும் அசுத்தமான உணவு, நீர் மற்றும் கைகள் மூலமும் மல-வாய் வழிப் பரவல் ஊடாகவும் இவை பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நேரம் இருமல்/தும்மல் மற்றும் நீர்த்துளிகள் காற்றில் பரவுதல் போன்றவை மூலமாகவும் இந்த வைரஸ் பரவ கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே கைகளை சவர்க்காரம் இட்டு சுத்தமான நீரில் நன்கு கழுவுமாறும் இருமல்/தும்மல் வரும் சந்தர்ப்பத்தில் ஒரு திசுத்தாள் அல்லது முழங்கையால் மூடிக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்குமாறும் அறைகளை நல்ல காற்றோட்டத்துடன் வைத்திருக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள், சுகாதார பணிப்பளார்கள் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரிகள் ஆகியோருக்கு இது தொடர்பான வழிகாட்டுதல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








