இணையம் மூலம் சிறுவர்கள், குற்றவாளிகளுக்கு இரையாகும் நிலை காணப்படுவதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பிரதி அமைச்சர் இதனை தெரிவித்தார்.
தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய தற்போதைய சமூகத்தில் பாடசாலை மாணவர்கள் சமூக ஊடகங்களை அதிகளவில் பயன்படுத்தினாலும், சில சந்தர்ப்பங்களில் அவற்றில் உள்ள அபாயங்கள் குறித்த போதிய புரிதல் இன்றி செயல்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இணையம் மூலம் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடைபெறுவதாகவும், இதனால் பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவர்கள் குற்றவாளிகளின் முக்கிய இலக்காக மாறியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
குறிப்பாக பாடசாலைக்கு செல்லாத சிறுவர்கள் பல்வேறு குற்றங்களுக்கும் போதைப்பொருள் வலையமைப்புகளின் விநியோக நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த சிறுவர்கள் குற்றங்களுக்கு பயன்படுத்தப்படுவதை தடுப்பது தொடர்பில் இலங்கை பொலிஸாரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், கடந்த காலத்தில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கும் இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் மற்றும் தகவல்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.








