தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தாழமுக்கமாக வலுவடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இது மேலும் வலுவடைந்து இலங்கையின் கிழக்கு கரையைக் கடந்து வட மாகாணத்தை ஊடறுத்து தமிழகத்தை நோக்கி நகர்கின்றது என தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாகக் கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
இதேவேளை, மறு அறிவித்தல் வரை மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழையின் போது, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.








