வடகீழ் பருவப் பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதன் காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.
இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும்.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் 150 மில்லிமீற்றரிலும் கூடிய மிகப் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா, பொலனறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைச் சாரல்களின் கிழக்கு சரிவுகளிலும்,வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.








