சேவை துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பில் கைது செய்யப்பட்ட யட்டியந்தோட்டை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி OIC விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன ஆயுதம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், சீதாவாகை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று ஜூன் 27 ஆம் திகதி சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
ஜூன் 26 ஆம் திகதி கடமைக்காக குறித்த அதிகாரி உத்தியோகபூர்வமாக ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 10 உயிருள்ள தோட்டாக்களை பெற்றுள்ளார்.
எனினும் கடமை முடிவடைந்த பின்னர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை அவர் ஒப்படைக்க தவறியதால் உடனடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பின்னர் சந்தேக நபர் இன்று ஜூன் 28 ஆம் திகதி ருவான்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்ட நீதவான், குறித்த பொலிஸ் அதிகாரியை ஜூன் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை, சீதாவாகை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் (SSP) நேரடி மேற்பார்வையில், சீதாவாகை பிரிவு குற்றத்தடுப்பு பிரிவுடன் இணைந்த விசேட நடவடிக்கை குழுவினர் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








