நாட்டில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் மலையகத் தமிழ் தொழிலாளர்கள், கடுமையான தொழிலாளர் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்வதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறியுள்ளது.

குறித்த தனியார் தேயிலைத் தோட்டங்கள், மலையகத் தமிழ் தொழிலாளர்களை நடத்தும் விதத்தில், எந்தவித தொழிலாளர் பொறுப்புக்கூறலும் இன்றிச் சட்டங்களையும் கடுமையாக மீறி வருகின்றன” என அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் தெற்காசிய பிராந்தியத்தின் பணிப்பாளர் ஸ்மிருதி சிங் கூறினார்.

இது தொடர்பான ஆய்வு,தென் மாகாணத்தில், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள 45 தேயிலைத் தோட்டங்களில் தொழில் புரியும் 159 தொழிலாளர்கள், முகாமையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களிடம் மேற்கொண்ட நேர்காணல்கள் மூலம் நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வு ஜனவரி 2024 முதல் ஜனவரி 2026 வரை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சுறுத்தல், மிரட்டல்கள், உடல்ரீதியான வன்முறை, கடன் மூலம் அடிமைப்படுத்துதல், நடமாட்டக் கட்டுப்பாடு, மோசமான வீட்டு வசதி மற்றும் மோசமான பணிச்சூழல் ஆகியன முக்கியப் பிரச்சினைகளாக இனம் காணப்பட்டுள்ளன.

அத்துடன் மகப்பேறு விடுப்பு, ஓய்வூதியம் மற்றும் நோய் விடுப்பு போன்ற சலுகைகளை மறுப்பதற்காக, பல தொழிலாளர்கள் “தற்காலிகத் தொழிலாளர்கள்” என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

சில தொழிலாளர்கள் முழு ஊதியம் பெற தினமும் 25 கிலோவுக்கும் அதிகமான தேயிலைகளைப் பறிக்க வேண்டியிருந்ததோடு, மேலும் இலக்குகள் எட்டப்படாவிட்டால் ஊதியம் குறைக்கப்பட்டது அல்லது தாமதப்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பலர் வீட்டு வசதிக்காக தோட்ட நிர்வாகத்தையே சார்ந்துள்ளனர் எனவும் வெளியேற்றப்படுவோம் என்ற அச்சத்தில் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விசாரணைகளை முடுக்கிவிடவும், சட்டங்களை அமுல்படுத்தவும், குறித்த தொழிலாளர்களுக்கு நீதி மற்றும் தொழிற்சங்கங்களை அணுகுவதை எளிதாக்கவும் வேண்டும் என அம்னெஸ்டி அமைப்பு இலங்கை அதிகாரிகளை கோரியுள்ளது.

கட்டாய உழைப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உள்ளூர் மற்றும் சர்வதேச சட்டங்களின் கீழ் இலங்கை அரசாங்கத்துக்கு தெளிவான கடமை உள்ளது என அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here