அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் முஸ்லிம் பெண் சுகாதார ஊழியர்களின் மத ஆடை உரிமை மற்றும் அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதுடன், நாட்டில் இன நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்துவதற்காக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் அவசியமாகும் என அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினர் இல்ஹாம் மரைக்கார் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த சில மாதங்களாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பெண் தாதியர்கள் தமது மத நம்பிக்கைகளுக்கும் தொழில்சார் கடமைகளுக்கும் ஏற்றவாறு அணியும் ஆடைகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இத்தகைய பிரச்சினைகள் அவ்வப்போது எழுப்பப்படுவதுடன், அவை இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதற்கான சூழலை உருவாக்கக்கூடும் என்பதையும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு சமூகத்தின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் இவ்வாறான பிரச்சினைகள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பது ஆட்சியாளர்களின் தார்மீகப் பொறுப்பாகும். அதேவேளை, இவ்விடயத்தில் அனைத்துச் சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஒருமித்த நிலைப்பாட்டையும் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் உருவாகியுள்ளது.
இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் நீண்டகால வரலாறும் பாரம்பரியமும் இந்த நாட்டின் நல்லிணக்கத்தையும் அமைதியான சகவாழ்வையும் அடிப்படையாகக் கொண்டவை என்பதைச் சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.
எனினும், குறிப்பிட்ட சிலரின் தேவைகளுக்காக இத்தகைய பாரம்பரிய நடைமுறைகளைப் பாதிக்கும் வகையில், அண்மைக்காலமாக முஸ்லிம் பெண் தாதியர்களின் ஹிஜாப் அணிதல் தொடர்பான விவகாரம் பெரிதுபடுத்தப்பட்டு, அதனைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம் பெண் சுகாதார ஊழியர்கள் மத ஆடைகளை அணிவதில் இலங்கையின் அரசியலமைப்பிலோ அல்லது நடைமுறையில் உள்ள சட்ட ஏற்பாடுகளிலோ தடைகள் இருப்பதாக உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத நிலையில், இப்பிரச்சினையைத் தொடர்ச்சியான இழுபறி நிலைக்குள் கொண்டு செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
இவ்விடயத்தைப் பயன்படுத்தி சமூகங்களுக்கிடையில் பதற்றத்தை ஏற்படுத்துவதற்கோ, அதன்மூலம் ஆதாயம் தேடுவதற்கோ எவரும் முயற்சிக்கக் கூடாது.
ஒருவரின் மத நம்பிக்கையுடன் தொடர்புடைய ஆடை அணியும் உரிமையைத் தடுக்கும் நடவடிக்கைகள் அவரது அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன.
எனவே, இவ்விவகாரம் உணர்ச்சிகளின் அடிப்படையில் அணுகப்படாமல், அரசியலமைப்பு ஏற்பாடுகள், சட்ட விதிகள், தொழில்சார் தேவைகள் மற்றும் அனைத்து சமூகங்களினதும் உரிமைகளைக் கருத்தில் கொண்டு நியாயமான முறையில் தீர்க்கப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்துக்கும் ஏனைய சிறுபான்மைச் சமூகங்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் நாட்டின் சமூக ஒற்றுமைக்கும் அமைதியான சகவாழ்வுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தன. இத்தகைய அனுபவங்கள் மீண்டும் ஏற்படாத வகையில், அனைத்து மக்களினதும் உரிமைகளையும் சமத்துவத்தையும் உறுதிப்படுத்துவது அவசியமாகும்.
எனவே, அரசாங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் சமூகத் தலைவர்கள் அனைவரும் கட்சி மற்றும் இன வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைந்து செயல்பட்டு, இப்பிரச்சினைக்கு விரைவானதும் நியாயமானதுமான தீர்வைக் காண வேண்டும்.
இதன் மூலம் முஸ்லிம் பெண் சுகாதார ஊழியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் பரஸ்பர நம்பிக்கையும் மேலும் வலுப்பெறும் வகையில் செயல்படுவதுடன்,இதனை ஒரு அரசியல் விடயமாக எடுத்து பூதாகரமாக மாற்றாமல் செயல்படுவது காலத்தின் தேவையாகும் என இல்ஹாம் மரைக்கார் மேலும் தெரிவித்துள்ளார்.








