சாரதி அனுமதி அட்டைகள் மற்றும் வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை வழங்குவதில் இலங்கை பெரும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளதாகவும், 1.6 மில்லியனுக்கும் அதிகமானவை நிலுவையில் உள்ளதாகவும் பாராளுமன்றக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பிமல் ரத்னாயக்க தலைமையில் இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான அமைச்சரவை ஆலோசனைக் குழுவின் சமீபத்திய கூட்டத்தின் போது இந்த விடயம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அச்சிடும் உபகரணங்கள் மற்றும் வெற்று அட்டைகளின் பற்றாக்குறை காரணமாக சுமார் 673,000 சாரதி அனுமதி அட்டைகள் நிலுவையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ, மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஒரு மில்லியன் அட்டைகள் கொண்ட தற்போதைய இருப்பு ஜனவரி 2027 க்குள் தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.

இரண்டு மில்லியன் அட்டைகளை வழங்குவதற்கான புதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தாலும், முதல் தொகுதி மார்ச் 2027 இறுதிக்குள் மாத்திரமே வழங்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, தற்போதைய வழங்குநரிடமிருந்து கூடுதலாக 500,000 அட்டைகளை பெறு வதற்கு அமைச்சரவை அனுமதியைப் பெற அதிகாரிகள் முன்மொழிகின்றனர்.

சாரதி அனுமதி அட்டை நிலுவைகள் 2027 நடுப்பகுதிக்குள் முழுமையாக நீக்கப்படலாம் என ஆணையாளர் நாயகம் நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையில், ஜனவரி 1, 2025 முதல் மார்ச் 9, 2026 வரை குவிந்த விண்ணப்பங்களில் இருந்து சுமார் 958,651 வாகனப் பதிவு இலக்கத் தகடுகள் நிலுவையில் உள்ளதாக குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.

தற்போதுள்ள ஒப்பந்தக்காரருக்கு தேவையான உற்பத்திப் பணிகள் ஒப்படைக்கப்பட்டால், இலக்கத் தகடு நிலுவைகளை ஏழு முதல் எட்டு மாதங்களுக்குள் நீக்க முடியும் என ஆணையாளர் நாயகம் கூறினார்.

இதேவேளை தாமதங்களைத் தீர்க்கவும் வழங்கல் செயல்முறையின் செயல்திறனை மேம்படுத்தவும் அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் ரத்நாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here