வினைகளை தீர்ப்பவர் விநாயகர். எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் விநாயகரை வழிபட்டு தொடங்கினால் தடையின்றி முடிவடைந்து விடுவதால் முதற்கடவுள் என்று அழைக்கப்படுகிறார்.
விநாயகருக்கு விருப்பமான நைவேத்யம் மோதகம், அப்பம், பழம், பொரி கடலை, கரும்பு, மா, பலா, வாழை, நாகப்பழம், விளாம்பழம், தேங்காய், இளநீர், அவரை, துவரை, சுண்டல், கொய்யா, புட்டு, பொங்கல், எள் உருண்டை, வடை, பாயசம், தேன், கல்கண்டு, சர்க்கரை, தினை மாவு, அதிரசம் ஆகியவை ஆகும்.
மண்ணால் செய்த விநாயகரை வழிபட்டால், நற்பதவி கிடைக்கும். புற்று மண்ணில் உருவாக்கப்பட்ட விநாயகரை வணங்கினால், லாபம் கிட்டும். உப்பால் உருவான விநாயகரை வணங்கிட எதிரிகள் அழிவர். கல்லால் அமைந்த விநாயகரை வழிபட, சகல பாக்கியங்களும் பெறலாம்.
நடனமாடும் தோற்றத்தில் இருக்கும் நர்த்தன விநாயகரை அணுகி, அவருக்கு அபிஷேகம் செய்து, இனிப்பு நைவேத்யம் செய்து, வழிபட்டு வந்தால், இழந்தவைகளை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம். கணபதியை வணங்கினால் காரிய தடைகள்யாவும் நீங்கும். விக்ன விநாயகனை வணங்க வினையாவும் நெருங்காது.
விநாயகர் பற்றிய சில அற்புத தகவல்கள்!
கோவை ஈச்சனாரிப் பிள்ளையார் தான் தமிழ்நாட்டில் முதன் முதலாக தங்கத் தேரில் பவனி வந்த பிள்ளையார் என்ற பெருமையைப் பெற்றவர்.
விநாயகப் பெருமான் பெண் வடிவத்தில் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயப் பெருமாள் கோவிலில் காட்சி தருகிறார். இவருக்கு புடவைதான் அணிவிக்கப்படுகிறது. கணேசாயினி என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார்.
விநாயகருக்கு விநாயகி, வைநாயகி, வின்கேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி, ஐங்கினி எனும் பெண்பால் சிறப்பு பெயர்களும் உண்டு.
அரை அடி உயர விநாயகரை மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் காட்சி தருகிறார். இவர் சுயம்புவாகத் தோன்றியதால் ‘தான்தோன்றி விநாயகர்” என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
ஜீரஹர விநாயகர் என்ற திருநாமத்துடன் கணபதி கையில் குடையுடனும் தும்பிக்கையில் அமிர்த கலசத்துடனும் கும்பகோணம் ஸ்ரீ நாகேஸ்வரசுவாமி கோவிலில் விநாயகர் காட்சி தருகிறார்.
விநாயகரின் ஐந்து கரங்கள் கூறும் தத்துவம் பற்றி தெரியுமா?
விநாயகப் பெருமானுக்கு ஐந்து கரங்கள். ஒரு கை பாசத்தை ஏந்தி உள்ளது. இது படைத்தலை குறிக்கிறது.
தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது.
அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது.
ஆகவே கணேசமூர்த்தி படைத்தல், அழித்தல், காத்தல் ஆகியவற்றை செய்யும் மும்மூர்த்தியாகிறார்.
மோதகம் ஏந்திய கை அருளை குறிக்கிறது.
எனவே இவர் பராசக்தியாகவும் இருக்கிறார். தும்பிக்கை மறைத்தலை குறிக்கிறது.
எனவே இவர் எல்லாம் வல்ல பரமேஸ்வரராகவும் இருக்கிறார்.
வெற்றியின் அடையாளமாகவே அனைவரும் விநாயகரின் பிள்ளையார் சுழி போட்டு ஒரு செயலை தொடங்குகிறோம்.
விநாயகரின் அருள் வேண்டுமா?
விநாயகரின் அருளை பெற அருள் கிடைக்க அனுதினமும் அவனை நினைத்து பாட வேண்டும்.
விநாயகர் அகவல்
விநாயகர் கவசம்
விநாயகர் சகஸ்ரநாமம்
காரிய சித்தி மாலை
விநாயகர் புராணம்
ஆகியவற்றை தினமும் படித்து அருகம்புல்லால் விநாயகனை வழிபட்டு வந்தால் விநாயகரின் அருள் நமக்குக் கிடைக்கும். இவற்றை படிப்பதன் மூலம் விநாயகரின் அருள் பரிபு+ரணமாக கிடைப்பதோடு துன்பம் நீங்கி இன்பம் பெற வழிவகுக்கும்.