யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியம் (MCSU), தமது வணிக பீடத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது வெசாக் விளக்கு சேதப்படுத்தப்பட்டதை வன்மையாகக் கண்டித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஒன்றியம், இதற்கு நேரடியாகப் பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்த வெசாக் நிகழ்வானது, மாணவர் ஒன்றியத்தின் அனுமதி மற்றும் ஆதரவுடன் சிங்கள மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதே நேரத்தில், தமிழ் மாணவர்களும் அதன் வெற்றியை உறுதி செய்வதற்காகத் தீவிரமாக ஒத்துழைத்தனர்.

மாணவர்கள் இந்த மத மற்றும் கலாசார விழாவைக் கொண்டாடுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க, சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டதாக ஒன்றியம் சுட்டிக்காட்டியது.

இந்தச் சம்பவத்தைப் பொதுமைப்படுத்தி, தமிழ் மாணவர் சமூகத்தின் மீது அநியாயமாகப் பொறுப்பைச் சுமத்தும் முயற்சிகள் குறித்து ஒன்றியம் தமது அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.

மேலும் ,இந்தத் தனிப்பட்ட செயலை ஒரு இனப் பிரச்சினையாக மாற்றும் முயற்சிகளை அது நிராகரித்ததுடன், சில தனிநபர்களின் செயல்களை சமூகங்களிடையே பிளவுகளை உருவாக்கப் பயன்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தியது.

மாணவர்கள் பொறுப்புடன் செயல்படுமாறும், தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும், அதிகாரிகள் ஒரு நியாயமான விசாரணையை நடத்த அனுமதிக்குமாறும் ஒன்றியம் கேட்டுக்கொண்டது.

அத்துடன் ஆசிரியர் சமூகத்திற்குள் நல்லிணக்கம், மரியாதை மற்றும் சகவாழ்வைப் பேணுமாறு அது அனைத்து மாணவர்களையும் கேட்டுக்கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here