சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைந்தாலும், இலங்கையில் எரிபொருள் விலையை குறைப்பது ஒகஸ்ட் அல்லது செப்டம்பருக்கு பின்னரே சாத்தியம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் இதனை கூறியுள்ளனர்.
‘இலங்கை எரிபொருளை மாதாந்த டெண்டர் மூலம் முன்கூட்டியே கொள்வனவு செய்கிறது. எனவே சர்வதேச அளவில் எரிபொருள் விலை குறைந்தாலும், அடுத்ததாக கொள்வனவு செய்யும் எரிபொருள் கையிருப்பில் இருந்தே விலை குறைப்பின் நன்மையை மக்களுக்கு வழங்க முடியும். எனவே விலை குறைப்பின் நன்மைகள் ஒகஸ்ட்/செப்டம்பரில் கிடைக்க வாய்ப்புள்ளது என அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் மக்கள் மீதான சுமையை குறைக்க அரசாங்கம் தற்போது டீசல், பெட்ரோல் இரண்டுக்கும் பெரும் மானியம் வழங்கி வருகிறது என்றும் எரிபொருள் விற்பனையில் இலாபம் உழைக்கும் நோக்கம் இல்லை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச விலை குறையும் சந்தர்ப்பத்தில், முதலில் அரசாங்கம் ஒதுக்கிய மானிய பணத்தை ஈடு செய்ய பயன்படுத்தும் எனவும் அதன்பின்னர் சில்லறை விலையில் மாற்றம் வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் எரிபொருள் விநியோகத்தில் QR முறை தொடரும் என அமைச்சர் கருணாதிலக்க, தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








