தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாதாந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள குறைந்த வருமானம் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் விசேட விரைவுத் திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ், சிரேஷ்ட பிரஜைகளுக்கான தேசிய செயலகம், ஆட்பதிவு திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியவை இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மாதாந்தம் ரூ. 5,000 கொடுப்பனவை சிரேஷ்ட பிரஜைகளுக்கான தேசிய செயலகம் வழங்கி வருகிறது.
தற்போதைய அரசாங்கம் அண்மையில் இந்த கொடுப்பனவை 3,000 ரூபாவில் இருந்து 5,000 ரூபாவாக அதிகரித்ததுடன், பயனாளிகளின் எண்ணிக்கையை ஒரு மில்லியனாகவும் விரிவுபடுத்தியுள்ளது.
தற்போது 6,98,790 சிரேஷ்ட பிரஜைகள் ‘அஸ்வெசும’ வங்கிக் கணக்குகள் மூலமாகவும், மேலும் 2,32,496 பேர் தபால் அலுவலகங்கள் மூலமாகவும் கொடுப்பனவை பெற்று வருகின்றனர்.
எனினும், தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் 76,716 தகுதியான பயனாளிகளால் கொடுப்பனவை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சிக்கலை தீர்க்கும் நோக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான விசேட திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் கொடுப்பனவை இழந்த முதியவர்கள் உடனடியாக தங்கள் கிராம சேவகர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் அல்லது முதியோர் உரிமைகள் ஊக்குவிப்பு உத்தியோகத்தரை தொடர்பு கொள்ளுமாறு முதியோர் தேசிய செயலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள், பிராந்திய ஒருங்கிணைப்பு குழுக்கள், சமூக அமைப்புகள் மற்றும் சமூக அபிவிருத்தி பேரவைகள் ஊடாகவும் பாதிக்கப்பட்ட பயனாளிகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
இதன் மூலம் தகுதியான சிரேஷ்ட பிரஜைகள் அனைவரையும் விரைவில் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செயலகம் தெரிவித்தது.







